கார் ஒன்றின் இயந்திரப் பகுதியில் சிக்கியிருந்த 2 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பொதுமக்கள் சிலரால் வெளியேற்றப்பட்டபோது காயமடைந்தது.
மரின் கிரசென்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்துமிடத்தில் இருந்த காரில் சிக்கியிருந்த அந்தப் பாம்பை மீட்கும்படி சனிக்கிழமை காலை 8 மணிவாக்கில் ‘ஏக்கர்ஸ்’ எனப்படும் விலங்குநல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு அழைக்கப்பட்டது.
காரில் உள்ள மிக இறுக்கமான இடத்தில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததாக ஏக்கர்ஸ் அமைப்பின் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் கூறினார்.
பொதுமக்களில் ஒருவர் பாம்பை வெளியே எடுக்க முயன்றபோது அது காயமடைந்ததாக அவர் சொன்னார்.
மூன்று ஆடவர்கள் பாம்பை வெளியேற்றுவதற்கு முன்னர், தடிகளைக் கொண்டு அதனை அவர்கள் குத்தியதாக ஷின் மின் சீன நாளிதழ் கூறியது.
இந்நிலையில், யாராவது பாம்பைப் பார்த்தால் அவர்கள் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடித்து, ஆலோசனைக்கு ஏக்கர்ஸ் அமைப்பை அழைக்கவேண்டும் என்று திரு வானன் கூறினார். பாம்பைப் பிடிக்கவோ தூண்டவோ கூடாது என்றார் அவர்.