சிங்கப்பூரில் $2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சிங்கப்பூரில் $2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

2 mins read
acc468b5-6145-404a-bcd2-40a1e1810943
துவாஸ் சோதனைச்சாவடியில் மார்ச் 17ஆம் தேதி 29 வயது மலேசியர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பின்புறப் பெட்டியிலிருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

சிங்கப்பூரில் இரண்டு மில்லியன் வெள்ளிக்குமேல் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாரம் சிங்கப்பூர் நிலச் சோதனைச்சாவடிகளில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அவை கைப்பற்றப்பட்டன.

மலேசியர் ஒருவரும் சிங்கப்பூரர் ஒருவரும் நாட்டுக்குள் போதைப்பொருளைக் கடத்திக் கொண்டுவர முயற்சி செய்தபோது கைதுசெய்யப்பட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) சனிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

முதல் சம்பவம், மலேசியருடன் தொடர்புடையது. செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் பிடிபட்டார். துவாஸ் சோதனைச்சாவடிக்கு வந்த அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிரச் சோதனை நடத்தினர். அந்த 29 வயது நபரின் மோட்டார்சைக்கிளும் சோதனையிடப்பட்டது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்புறப் பெட்டியில் கருப்பு நிறத்தில் பல பொட்டலங்கள் இருந்தன. அவற்றில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்பினர்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் அங்கு வந்த மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், மேலும் சோதனைகளை நடத்தி கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் என நம்பப்படும் 25 பொட்டலங்களையும் கைப்பற்றினர்.

பொட்டலங்களில் மொத்தம் 14 கிலோ ஹெராயின், 2.6 கிலோ ஐஸ், 190 கிராம் எக்ஸ்டசி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரருடன் தொடர்புடைய சம்பவத்தில் அவர் ஒரு பயணியாக மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் வந்தபோது தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். புதன்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றது.

29 வயதான அந்த நபரின் இடுப்புப் பகுதிக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் என நம்பப்படும் ஒரு பொட்டலத்தை ஐசிஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளில், அவரிடமிருந்து பல்வேறு போதைப்பொருள் உபகரணங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், கிட்டத்தட்ட 81 கிராம் கஞ்சா இருந்த ஒரு பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு சம்பவங்களிலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 2 மில்லியன் வெள்ளிக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஹெராயின், ஐஸ், போதைமிகு அபின் ஆகியவை ஒரு வாரத்திற்கு 8,169 பேரை போதைக்கு அடிமையாக்க போதுமானவை.

இரு சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்