1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பான ஒரு வழக்கை ரத்து செய்யுமாறு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஏற்கெனவே 2025 நவம்பர் மாதமும் வங்கி தாக்கல் செய்த இதேபோன்ற மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.
மேல்முறையீட்டு மனு ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்படக்கூடிய இடத்திலிருந்து வழக்கு விசாரணை தொடரவேண்டுமென வாதித்தரப்பினரான நிறுவனக் கலைப்பு அதிகாரிகள் ஜூலை 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அதிகாரிகள் சில வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பாக 2025 ஜூன் மாதம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.
கடந்த 2009, 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருடப்பட்ட நிதியின் பரிவர்த்தனைகளை மறைக்க உதவிய நூற்றுக்கும் மேற்பட்ட பணப் பரிமாற்றங்களை அந்த வங்கி அனுமதித்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும், நிதிப் பரிமாற்றம் தொடர்பான வெளிப்படையான எச்சரிக்கை அறிகுறிகளை அது கவனத்தில்கொள்ளவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தகைய பரிவர்த்தனைகளை அனுமதித்ததன் மூலம் சிங்கப்பூரின் பணமோசடி தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வங்கி தவறிவிட்டதாக நிறுவனக் கலைப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும், வங்கியின் அத்தகைய செயலால் US$2.7 பில்லியன் (S$3.5 பில்லியன்) தொகையையும் $20 மில்லியன் பொது நிதியையும் தாங்கள் இழந்துவிட்டதாக வாதித் தரப்பினர் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், அந்த வழக்கை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தை வங்கி நாடியது.
தன்மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு எதிராக வங்கி தீவிரமாகத் தற்காத்துக்கொள்ளும் என்று வங்கியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

