குறுந்தகவல் குழுக்கள் சம்பந்தப்பட்ட முதலீட்டு மோசடிகளில் $3.6 மில்லியன் இழப்பு

குறுந்தகவல் குழுக்கள் சம்பந்தப்பட்ட முதலீட்டு மோசடிகளில் $3.6 மில்லியன் இழப்பு

2 mins read
c28c9e33-90bc-4252-9a9a-62b32a3e26e4
இவ்வாறு நடக்கும் முதலீட்டு மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. - படம்: அடிரோண்டாக் வங்கி

முதலீட்டு உத்திகளை இலவசமாகக் கற்றுத் தருவதாக விளம்பரப்படும் குறுந்தகவல் குழுக்கள் (group chat) தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அத்தகைய குறுந்தகவல் குழுக்களில் மோசடிச் செயல்கள் இருக்கலாம் என்பது அதற்குக் காரணம்.

காவல்துறை எச்சரிக்கை

அதுபோன்ற குழுக்களில் சேர்ந்துகொள்வது குறித்து காவல்துறை வியாழக்கிழமை (ஜூன் 4) எச்சரிக்கை விடுத்தது. இதன் தொடர்பில் கடந்த மே மாதத்திலிருந்து 48 புகார்கள் வந்துவிட்டதாகவும் குறைந்தது 3.6 மில்லியன் வெள்ளி பறிமுதல்செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

போலி சமூக ஊடக விளம்பரங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுக்காரர்கள் முதலீட்டு உத்திகளை இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறி மக்களை ஈர்க்கின்றனர். இதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு வரும் என்று காவல்துறை கூறியது.

ஏமாற்றுக்காரர்கள் தங்களை வழிகாட்டிகளாக அடையாளப்படுத்திகொண்டு முதலீட்டு ‘அறிவுரை’ வழங்குவர். முதலீடு செய்யுமாறு அவர்கள் பிறரை ஊக்குவிப்பர். சம்பந்தப்பட்ட குறுந்தகவல் குழுவில் இருக்கும் பிறர் முதலீடு செய்ததன் மூலம் தாங்கள் சம்பாதித்ததாகக் கூறிக்கொள்ளும் லாபத்தை ‘நிரூபிக்க’ குறுந்தகவல் குழுவில் ‘ஸ்கிரீன்‌ஷாட்’ படங்களைப் பகிர்வர்.

இவ்வாறு இந்த மோசடி மேற்கொள்ளப்படுகிறது. போலி இணையத்தளங்களில் முதலீட்டுக் கணக்குகளை ஏற்படுத்திக்கொள்ளவோ ஆப்பிள் அல்லது கூகல் செயலிச் சந்தைகளிலிருந்து போலி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்குக் ‘கற்றுத் தரப்படும்’.

சில வேளைகளில், முதலீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோரிடம் பாதிக்கப்பட்டோர் ரொக்கம் அல்லது தங்கத்தை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவர். அந்த ‘முதலீட்டு நிறுவன ஊழியர்கள்’ பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்தவர்களாக இருப்பர்.

ஏமாற்றப்பட்டது பின்னர் தெரியவரும்

தாங்கள் ஈட்டியதாக நம்பப்பட்ட லாபத்தைப் பெற முடியாதபோது அல்லது ஏமாற்றுக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாதபோதுதான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டோர் உணர்வர் என்று காவல்துறை குறிப்பிட்டது.

தங்களுக்குப் பழக்கம் இல்லாத, அடையாளம் சரிபார்க்கப்படாத நபர்களிடம் பணத்தையோ மற்ற விலைமதிப்புள்ள பொருள்களையோ ஒப்படைக்கவேண்டாம் என்று காவல்துறை, மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

தங்களின் திறன்பேசிகளில் பாதுகாப்பு அம்சங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் காவல்துறை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்துக்கெள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்முதலீடுஏமாற்றுஎச்சரிக்கைகாவல்துறைபாதுகாப்புபணம்தங்கம்