மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்து சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக அமலாக்க நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
அதில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 251 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மார்ச் 26ஆம் தேதிமுதல் ஏப்ரல் 8ஆம் தேதிவரை காவல்துறை அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டது.
சந்தேகப் பேர்வழிகளின் வயது 16க்கும் 84க்கும் இடைப்பட்டது. அவர்கள் 665க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மோசடிச் செயல்களால் 3.9 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தது.
பெரும்பாலான மோசடிகள் இணைய வணிகம், நண்பரைப் போல் நடித்து ஏமாற்றுவது, வேலை, அரசாங்க ஊழியர்போல் நடிப்பது, முதலீடு, வீட்டு வாடகை போன்றவைகளாகும்.
விசாரிக்கப்படும் சந்தேகப் பேர்வழிகளில் 172 பேர் ஆண்கள், 79 பேர் பெண்கள். அவர்களிடம் மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, உரிமம் இல்லாமல் கடன் சேவை வழங்கியது போன்ற குற்றங்களுக்குக் கீழும் விசாரிக்கப்படுகிறது.
மோசடிக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றச் செயலுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 500,00 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கடன் சேவைகள் வழங்கினால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 125,00 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடிக் கும்பல்களுக்குத் துணைபுரிவோர்க்கு ஆறு முதல் 24 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
பொதுமக்கள் மோசடி தொடர்பான தகவல்களை 1800-255-0000 என்ற காவல்துறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.
www.police.gov.sg/i-witness என்ற மின்னஞ்சல் வழியாகவும் காவல்துறையை அணுகலாம்.

