$3 பில்லியன் பண மோசடி: கைப்பற்றப்பட்ட பொருள்களின் ஏலத்தில் $1.1 மி. திரண்டது

$3 பில்லியன் பண மோசடி: கைப்பற்றப்பட்ட பொருள்களின் ஏலத்தில் $1.1 மி. திரண்டது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2026 - 8:50 pm

1 mins read

சிங்கப்பூரில் மாபெரும் மோசடியான $3 பில்லியன் கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்புடைய ஆடம்பரக் கைப்பைகள், நகைகள் ஆகியவற்றுக்கான முதல்கட்ட இணைய ஏலத்தில் $1.1 மில்லியனுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 337 பொருள்களைக் கொண்ட இந்த இணைய ஏலம் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

ஹாட்லாட்ஸ் ஏல நிறுவனம் நடத்திய இந்த விற்பனையில், $1,000 முதல் $1,500 வரை மதிப்பிடப்பட்ட ‘கிரோம் ஹார்ட்ஸ்’ வைர நகை $11,000க்கு ஏலம் போனது.

‘கிறிஸ்டியன் டியோர்’ சிறிய ரகக் கைப்பையை ஒருவர் $20,000க்கு வாங்கினார்.

‘லூயி உட்டான்’ கைப்பையை வாங்க 81 ஏலக் கோரிக்கைகள் வந்தன; அதன் இறுதி விலை $87,000ஐ எட்டியது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை விற்றுப் பணமாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள டெலாய்ட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்துத் தொகையும் அரசாங்கம் திரட்டியுள்ள நிதியில் சேர்க்கப்படும்.

அடுத்தகட்டமாக 286 நகைகளுக்கான ஏலம் செப்டம்பர் 27ஆம் தேதி நிறைவடையும்.

அதில், 15.02 கேரட் மஞ்சள் வைர மோதிரத்திற்கு ஏற்கெனவே $190,000 ஏலத் தொகை கேட்கப்பட்டுள்ளது.

கடிகாரங்கள், ‘ஹெர்மாஸ்’ கைப்பைகள், மதுபானங்கள் ஆகியவற்றிற்கான ஏலம் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கும்.

முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஆடம்பர வீடுகள், அலுவலக இடங்களுக்கான ஏலத்தில் எந்தச் சொத்தும் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மோசடிகள்ளப்பணம்பறிமுதல்