சிங்கப்பூரில் உள்ள எட்டு நிறுவனங்கள் தவறிழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
$3 பில்லியன் பண மோசடி வழக்குடன் தொடர்புடைய இரண்டு பேருடன் அவை சம்பந்தப்பட்டவை என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறிழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அடுத்து, இந்த எட்டு நிறுவனங்களும் வர்த்தகங்களில் ஈடுபட முடியாது.
சூ பிங்ஹாய்க்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தும் ஸு ஹைகாவுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தும் கட்டுப்பாட்டு அல்லது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் காவல்துறை ஆணையமும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தன.
“எட்டு நிறுவனங்களும் தவறிழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக கட்டுப்பாட்டு அல்லது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதிலிருந்து அவற்றின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் சிங்கப்பூரில் வர்த்தகம் செய்யவோ அல்லது நிதிப் பரிவர்த்தனைகள் செய்யவோ சாத்தியம் இல்லை,” என்று சிங்கப்பூர் காவல்துறையும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையமும் கூறின.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று இப்பண மோசடி தொடர்பாக காவல்துறை அதிரடி நடவடிக்கை நடத்தியது.
அதில் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
17 சந்தேக நபர்கள் தப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
தப்பியவர்களில் சூ பிங்ஹாயும் ஸு ஹைகாவும் அடங்குவர்.
ரொங் ஹாய் டெவலப்மெண்ட்டின் இயக்குநராக ஸு ஹைகா உள்ளார் என வர்த்தகப் பதிவகம் மூலம் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அவர் இப்பதவியை வகித்து வருகிறார்.
அந்நிறுவனத்தின் ஏக பங்குதாரரும் அவரே. பங்குகளின் மதிப்பு $500,000.
ஆறு நிறுவனங்களின் இயக்குநராக சூ பிங்ஹாயின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றின் முகவரி அனைத்தும் ஆடம் சாலைக்கு அருகில் உள்ள உயர் தர தரை வீட்டின் முகவரியாகும். அங்குதான் சூ முன்பு வசித்தார்.
எட்டு நிறுவனங்களின் பங்குதாரராக அவர் தொடர்கிறார்.
அவற்றில் நியூ ஃபியூச்சர் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஒன்று.
அந்நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு $2.5 மில்லியன்.

