மூன்று பில்லியன் வெள்ளி மதிப்பிலான கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 10 சொகுசு அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு விடப்படுகின்றன.
அந்த வீடுகள் ரிவர் வேலியிலும் தஞ்சோங் பகாரிலும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றின் விலையும் 2.238 மில்லியனிலிருந்து 6.78 மில்லியன் வெள்ளிக்கு இடைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
80க்கும் மேற்பட்ட சொத்துகள்
மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள 80க்கும் அதிகமான சொத்துகளில் விற்பனைக்கு வரும் முதல் சொத்துகள் அவை.
அந்த 10 சொகுசு வீடுகளுக்கான ஏலத்தை எஸ்ஆர்ஐ நிறுவனம் நடத்தும். ஏலம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி கிரேட் வோர்ல்ட் சிட்டியில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெறும்.
எஸ்ஆர்ஐயைத் தவிர ஏலத்தை நடத்த எட்மண்ட் டை அண்ட் கம்பனி, நைட் ஃபிராங்க் ஆகிய நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில சொத்துகளை லிஸ்ட் இன்டர்நேஷனல் ரியால்டி நிறுவனமும் கையாளும்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய கள்ளப்பண விவகாரத்தில் ரொக்க வடிவில் இல்லாத சொத்துகளைக் கையாள சிங்கப்பூர் காவல்துறை, சென்ற ஆண்டு டிலோய்ட் சிங்கப்பூர் கணக்கெடுப்பு நிறுவனத்தை நியமித்தது. கள்ளப்பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள 80க்கும் அதிகமான சொத்துகள் கட்டங்கட்டமாக ஏலத்துக்கு விடப்படும் என்று டிலோய்ட் சிங்கப்பூர் தெரிவித்தது.
மார்ட்டின் மோடர்ன், வாலிக் ரெசிடன்ஸ்
எஸ்ஆர்ஐக்குக்கீழ் மார்ட்டின் மோடர்ன் திட்டத்தில் உள்ள ஆறு சொகுசு வீடுகள் வரும். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உள்ள கிரேட் வோர்ல்ட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே மார்ட்டின் மோடர்ன் வீடுகள் அமைந்துள்ளன.
அதேபோல் வாலிக் ரெசிடன்ஸ் திட்டத்தில் உள்ள நான்கு உயர்தர அடுக்குமாடி வீடுகளுக்கான ஏலத்தையும் எஸ்ஆர்ஐ கையாள்கிறது. வாலிக் ரெசிடன்ஸ், மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ளது. அது, தஞ்சோங் பகார் பிளாசாவுக்கு அருகே உள்ளது.
இந்த மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மே மாதம் வரை 15 ஏல நடவடிக்கைகள் நடைபெறும் என்று உள்ளூர் ஏல நிறுவனமான ஹொவ்லோட்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது. 1,000க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏலத்துக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


