அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியான் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை திட்டமிடப்பட்டிருந்த பிரசார நடைப்பயணங்களைக் கைவிட்டுள்ளார்.
அதற்குப் பதில் பிரசாரத் துண்டுச்சீட்டுகளை வாக்காளர்களிடம் விநியோகிக்குமாறு தமது தொண்டூழியர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக சிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.
என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான 75 வயது டான், முன்னதாக திங்கட்கிழமை பூன் லே பிளேஸ் சந்தைக்கும் செவ்வாய்க்கிழமை ஆயர் ராஜா உணவங்காடி நிலையத்திற்கும் செல்லவிருப்பதாக ஊடகத்தினரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு, அனைத்து பிரசார நடைப்பயணங்களும் நேர்காணல்களும் ரத்து செய்யப்படுவதாக ‘வாட்ஸ்அப்’ குழுவில் உள்ள செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், திரு டானின் தொண்டூழியர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான ‘வாட்ஸ்அப்’ குழுவில், பிரசார நடைப்பயணத்தைப்போலவே திரண்டு வந்து கடைகள், உணவங்காடி நிலையங்கள், வாடிக்கையாளர்கள் ஆகிய தரப்புகளுக்கு பிரசாரத் துண்டுச்சீட்டுகளை விநியோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் நாளான ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் திரு டான் அன்றாடம் பிரசார நடைப்பயணங்களை மேற்கொண்டு வந்தார். ஆகஸ்ட் 26ஆம் தேதி மட்டும் அவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக சங்க உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியதால் அத்தகைய நடைப்பயணத்தை மேற்கொள்ளவில்லை.
ஆகஸ்ட் 27ஆம் தேதி தம்மை ஆதரிக்கும் டாக்டர் டான் செங் போக், திரு டான் ஜீ சே இருவருடனும் இணைந்து அவர் பிரசார நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், வேறு புதிய முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டால் அதுகுறித்துத் தகவல் அளிக்கப்படும் என்று திரு டானின் ஊடகக் குழு தெரிவித்தது.

