காவல்துறை அதிகாரிகள், வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களை ஞாயிற்றுக்கிழமை (மே 11) கைது செய்துள்ளது. அவர்கள் 48 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
முதல் புகார் அளிக்கப்பட்ட 27 மணி நேரத்துக்குள் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்களும் சிக்கினர். அவர்கள்மீது நீதிமன்றத்தில் நாளை (மே 12) திருடும் நோக்கத்துடன் வீடு புகுந்த குற்றம் சுமத்தப்படும்.
புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள குளுனி பார்க், டனர்ன் குளோஸ், எங் நியோ அவென்யூ ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சந்தேகப் பேர்வழிகள் அத்துமீறி புகுந்தது குறித்து மே 9, 10ஆம் தேதிகளில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
தீவிர விசாரணைக்குப் பிறகு கண்காணிப்புக் கேமராக்கள், காவல்துறைக் கேமராக்கள் ஆகியவற்றின் உதவியுடன் தங்ளின் காவல் நிலைய, காவல் செயல்பாட்டுத் தளபத்திய நிலைய, காவல்துறை புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேக ஆடவர்களை அடையாளம் கண்டனர்.
ஸ்பெயினிலும் கொலம்பியாவிலும் இரட்டைக் குடியுரிமை வைத்துள்ள 60 வயது ஆடவர், மெக்சிகோவைச் சேர்ந்த 51 வயது ஆடவர், மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற 48 வயது ஆடவர் ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களில் சுற்றுப்பயணிகளாக சிங்கப்பூருக்குள் வந்தனர். அந்த மூவரும் இன்று (மே 11) கைதுசெய்யப்பட்டனர்.
ஒரு கார், இரும்பை அறுக்கும் ரம்பம், நகைகள், $18,000க்கும் அதிகமான மதிப்புக்கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரொக்கம் ஆகியவை ஆடவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
ஆடவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படக்கூடும்.
பொதுமக்களில் இருவர் சந்தேக ஆடவர்களைத் துரிதமாகக் கைது செய்வதற்குத் துணை புரிந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சிங்கப்பூரில் குறைந்து வந்தாலும் பன்னாட்டுக் குற்றவாளிகள் சிங்கப்பூரைக் குறிவைப்பதாக அதிகாரிகள் எச்சரித்தனர். பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தினர்.

