செம்பவாங்கில் பேருந்து, கார், மோட்டர்சைக்கிள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
திங்கட்கிழமை காலை நடந்த இந்த விபத்தில் மெக்டோனால்ட்ஸ் உணவு விநியோகிப்பாளர் உட்பட மூவர் காயமடைந்தனர்.
செம்பவாங் வே - கேன்பரா ரோடு சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து தங்களுக்குத் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
போக்குவரத்துச் சந்திப்பில் நின்றிருந்த மோட்டர்சைக்கிளோட்டிமீது மோதுமுன், 980 எண் கொண்ட பேருந்து மூன்று வழித்தடங்கள் உள்ள சாலையின் நடுத்தடத்தில் சிறிது வேகமாக நகர்வதை எஸ்ஜி ரோடுவிஜிலான்டே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் காண முடிந்தது.
மேலும், பேருந்து மோதியதால் தனது மோட்டார்சைக்கிளிலிருந்து அந்த உணவு விநியோகிப்பாளர் முன்னால் நின்றிருந்த காரின் பின்புறக் கண்ணாடியில் தூக்கி வீசப்பட்டதையும் அக்காணொளி காட்டியது.
இந்த விபத்துக்கு 68 வயது பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் எனக் கண்டறியப்பட்டதால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ‘டவர் டிரான்சிட்’ பேச்சாளர் தெரிவித்தார்.
கார் ஓட்டுநருக்கும் பேருந்தில் தன் தாயுடன் பயணம் செய்த கைக்குழந்தைக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்த விபத்தில் காயமடைந்த 38 வயது மோட்டார்சைக்கிளோட்டி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.