4,620 கள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: மூவர் கைது

2 mins read
06742f82-9323-4ae8-8202-adfb5bbff633
சுவா சூ காங் அவென்யூ 5லும் உட்லண்ட்ஸ் ரைசிலும் நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் வரி செலுத்தப்படாத 4,620 சிகரெட் பெட்டிகளும் 4,200 சிகரெட் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. - படம்: சிங்கப்பூர் சுங்கத் துறை

சிங்கப்பூர் ஆடவர் மூவர் $690,000க்கும் அதிகமான தீர்வையையும் பொருள், சேவை வரியையும் செலுத்தத் தவறியதற்காக செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 20 - 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகிப்பதற்காக, சமூகச் செய்தித்தளம் ஒன்றின் வழியாக அடையாளம் தெரியாதவர்கள் அந்த மூவரையும் தொடர்புகொண்டது விசாரணையில் தெரியவந்தது என்று சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.

அது சுவா சூ காங் அவென்யூ 5இலும் உட்லண்ட்ஸ் ரைசிலும் நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் வரி செலுத்தப்படாத 4,620 சிகரெட் பெட்டிகளையும் 4,200 சிகரெட் பாக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

சுவா சூ காங்கில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், அதிகாரிகள் 20, 25 வயதுடைய இரண்டு ஆடவர்கள் வேன் ஒன்றில் பெட்டிகளை அடுக்குவதைக் கண்டனர். சோதனை நடத்திய பிறகு, வரிசெலுத்தப்படாத 2,460 சிகரெட் பெட்டிகளையும் 1,800 சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது சோதனை நடவடிக்கை உட்லண்ட்ஸ் ரைசில் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்த வேன் ஒன்றில் வரிசெலுத்தப்படாத 2,160 சிகரெட் பெட்டிகளும் 2,400 சிகரெட் பாக்கெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 27 வயது வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகளும் இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

முதல் சோதனை நடவடிக்கையில் தீர்வை, பொருள், சேவை வரியின் மதிப்பு $636,336 என்றும் இரண்டாம் சோதனை நடவடிக்கையில் அதன் மதிப்பு $55,394 என்றும் மதிப்பிடப்பட்டது.

நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்