புக்கிட் தீமாவில் வீடு புகுந்து கொள்ளையடித்த மூன்று சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று வெளிநாட்டவர் மீது திங்கட்கிழமை (மே 12) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் ஒரு வீட்டில் மட்டும் நகைகள், ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரொக்கம் என கிட்டத்தட்ட $684,000 திருடியதாகக் கூறப்படுகிறது.
ஸ்பானிய-கொலம்பிய நாட்டவர் ஹெர்னாண்டோ ஜிரால்டோ ஃபிரான்கோ, 60, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஹெக்டர் டானியால் கார்சியா, 51, மெக்சிகோ-கொலம்பியா நாட்டவர் மட்டையோ ஆண்ரெஸ் கார்சஸ் முரிலோ, 48 ஆகியோரே அம்மூவரும் என்று தெரியவந்துள்ளது. இதில் ஹெர்னாண்டோ, மட்டையோ இருவரும் இருநாட்டுக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மூவரும் டன்னர்ன் கிளோசில் உள்ள தனியார் குடியிருப்புக்குள் மே 9ஆம் தேதி சன்னல் வழியாக இரவு 9.55 மணிக்கு நுழைந்ததாக அவர்கள் மீதான குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.
பின்னர் அம்மூவரும் $421,300 மதிப்புள்ள நகைகள், மாண்ட் பிளாங் மென், புருகே மென் (Mont Blanc Men and Bruguet Men vintage watches) போன்ற $58,000 மதிப்புள்ள ஏழு ஆடம்பர கைக்கடிகாரங்கள், $80,000 மதிப்புள்ள ஒரு கார்டியே கைக்கடிகாரம் (Cartier watch ) ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், கிட்டத்தட்ட $11,000 பெறுமானமுள்ள உள்ளூர், வெளிநாட்டு ரொக்கத்தையும் அந்த வீட்டிலிருந்து திருடிச் சென்றுள்ளனர்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நீதிபதி பால் குவான் திங்கட்கிழமை (மே 12) மூவரையும் ஒருவார விசாரணைக் காவலில் வைத்திருக்கும்படி உத்தரவிட்டார்.
அவர்களிடமிருந்து சாட்சியங்களை மீட்பது, தேவைப்பட்டால் கூடுதல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதால் அவர்களை விசாரணைக் காவலில் வைத்திருப்பது அவசியம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.