மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளின் தொடர்பில் தனிப்பட்ட குற்றங்களுக்காக ஏப்ரல் 4ஆம் தேதி இரு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
வாடகை மோசடியின் தொடர்பில் மற்றொருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
தமது ஓசிபிசி, பிஓஎஸ்பி வங்கிக் கணக்குகளையும் சிங்பாஸ் கணக்கையும் வேறொருவருடன் பகிர்ந்துகொண்டதாக 28 வயது முகம்மது அகிட் ரஹ்மாட் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
வேலை, முதலீட்டு மோசடிகளிலிருந்து பெறப்பட்ட கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க, அவரது இரண்டு வங்கிக் கணக்குகளும் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.
சிங்கப்பூரரான அவர் 2022ஆம் ஆண்டு நவம்பரில் இந்தச் செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
டெலிகிராம் செயலியில், $500 மாதாந்திரச் சம்பளம் வழங்குவதாக வெளியிடப்பட்ட இணைய வேலை விளம்பரத்திற்கு அவர் பதில் அளித்திருந்தார். அதற்குக் கைமாறாக, அகிட் நுண்நாணயக் கணக்கு ஒன்றைத் திறந்து தமது வங்கிக் கணக்கு விவரங்கள், சிங்பாஸ் கணக்கு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
அகிட் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று கூறியதால், அவரின் வழக்கு ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமது சிஐஎம்பி வங்கிக் கணக்கை மற்றொருவரிடம் கொடுத்ததாக வாங் யூஹாங் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு வேலை மோசடி ஒன்றிலிருந்து கிடைத்த கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், டெலிகிராமில் வெளியிடப்பட்ட இணைய விளம்பரத்திற்கு அவர் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதில் வாங்கின் வங்கிக் கணக்கு விவரங்களுக்கும் இணைய வங்கி விவரங்களுக்கும் கைமாறாக, $600 கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாங்கின் வழக்கு விசாரணை மே மாதம் 8ஆம் தேதி நடைபெறும்.
சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 4,700க்கும் மேற்பட்டோர் பணமோசடி தொடர்பான குற்றச்செயல்களுக்காகக் கைதுசெய்யப்பட்டனர் அல்லது விசாரிக்கப்பட்டனர்.