மாதை எட்டி உதைத்த ஆடவருக்குச் சிறை

2 mins read
c86105c6-fa36-4586-9424-8ee3e2b54bdc
வோங் சிங் ஃபோங் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையாக $13.20 செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2021ஆம் ஆண்டு மே மாதம் ஒருவரை இனரீதியாக அவமதித்து, நெஞ்சில் உதைத்த வோங் சிங் ஃபோங்கிற்கு திங்கட்கிழமை மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சமுதாயத்தில் இன, சமய வெறுப்புணர்வு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மாவட்ட நீதிபதி ஷைஃபுடின் சருவான் வலியுறுத்தினார்.

32 வயதான வோங், திருவாட்டி ஹிண்டோச்சா நிதா விஷ்னுபாய் என்ற மாதை, 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி சுவா சூ காங்கில் உள்ள நார்த்வேல் கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்திற்கு அருகில் தாக்கினார். அச்சம்பவம் கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது நடந்தது.

திருவாட்டி நிதாவுக்கு $13.20 இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு வோங்கிற்கு உத்தரவிடப்பட்டது.

ஒன்பது நாள் வழக்கு விசாரணை ஜனவரி மாதம் தொடங்கியது.

மாதைத் தாக்கியதற்கும், மாதின் உணர்ச்சிகளை இனரீதியாகக் காயப்படுத்தியதற்கும் வோங்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கடந்த ஜூன் மாதம் நிரூபணமாயின.

திருவாட்டி நிதா தாம் விரைவுநடை உடற்பயிற்சியைச் செய்துகொண்டே, சுவா சூ காங் விளையாட்டரங்கிற்குச் சென்றுகொண்டிருந்ததாக வழக்கு விசாரணையின் முதல் நாளன்று கூறினார். அங்குள்ள உணவகம் ஒன்றில் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். திடீரென யாரோ கத்துவதைக் கேட்டதாக அவர் சொன்னார்.

திரும்பிப் பார்த்தபோது வோங்கும் அவரது வருங்கால மனைவி சுவா யுன் ஹானும் தமது முகக் கவசத்தைச் சரியாகப் போடும்படி தம்மிடம் கூறியதாகத் திருவாட்டி நிதா கூறினார்.

தாம் உடற்பயிற்சி செய்வதாகவும், தமக்கு வியர்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர் அத்தம்பதியிடம் விளக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது முகக் கவசங்களை அணியவேண்டிய தேவை இல்லை.

இருப்பினும் குற்றவாளி அவரைத் திட்டி, நெஞ்சுப் பகுதியில் உதைத்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.

இனரீதியாகத் தூண்டப்படும் தாக்குதலில் மற்றொருவரைத் தாக்கினால், குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், $7,500 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்