தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தில் ஒரே வாரத்தில் மூன்று சேவைத் தடங்கல்கள் நிகழ்ந்தபோதிலும் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சமிக்ஞை கோளாறு காரணமாக டிசம்பர் 27ஆம் தேதி அந்த ரயில் தடத்தில் பல்வேறு ரயில்கள் இடையிடையே நின்று சென்றன.
ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பு சீர்செய்யப்பட்ட பின்னர் மணிக்கு 18 கிலோமீட்டர் என்னும் வேகத்திலேயே ரயில்கள் இயக்கவேண்டிய அவசியம் இருந்ததாக எஸ்எம்ஆர்டி கூறியது.
காலை 6.30 மணிக்குத் தொடங்கிய சேவை இடையூறு காரணமாக அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை பயணத் தாமதம் ஏற்பட்டதாக அது வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
அடுத்த இரு நாள்களில் ரயில் ஒன்றின் நிறுத்துவிசையில் கோளாறு கண்டறியப்பட்டதால், பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப அந்த ரயில் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் டிசம்பர் 29ஆம் தேதி 15 நிமிட தாமதத்திற்குப் பிறகு சேவை மீண்டது.
ஆகக் கடைசியாக, ஜனவரி 2ஆம் தேதி மாலை ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருந்த ரயில் ஒன்று அவசரமாக நிறுத்தப்பட்டதன் காரணமாக சேவைத் தடங்கல் நிகழ்ந்தது.
“இத்தனை சேவைத் தடங்கல்கள் நிகழ்ந்தபோதிலும், நேர், எதிர் என இரு திசைகளிலும் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன.
“பயணத்திற்கு வழக்கத்தைவிட கூடுதலாக 10 முதல் 15 நிமிடங்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறு பயணிகளுக்குச் சொல்லப்பட்டது,” என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்து உள்ளது.