இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 36 வயது லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மற்றொரு லாரியின் ஓட்டுநர் உட்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் லாரி ஓட்டுநரின் வயது 59. லாரியில் பயணம் செய்தவரின் வயது 48. டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மூவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
லாரிகள் மோதிய விபத்து செவ்வாய்க்கிழமை (மே 27) பிற்பகலில் ராஃபிள்ஸ் கல்விக்கழகம் அருகில் உள்ள பிரேடல் ரோட்டில் நிகழ்ந்தது.
பீஷான் மேம்பாலச் சாலைக்கு முன்னர் பார்ட்லி ரோடுக்குச் செல்லும் வழியில் விபத்து நிகழ்ந்திருப்பதாக பிற்பகல் 2 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அந்தப் படையினர் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பார்த்தபோது மோதிய லாரிகளின் ஓட்டுநர்கள் இருக்கையில் சிக்கிக்கொண்டனர்.
‘ஹைட்ராலிக்’ மீட்பு சாதனங்களின் உதவியுடன் அவ்விருவரையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்டனர்.
மற்றொருவரையும் சேர்த்து மூன்று பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்தப் படை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, விபத்து காரணமாக தீவு விரைவுச்சாலையில் பிரேடல் ரோடு நோக்கிச் செல்லும் லோர்னி பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக, நிலப் போக்குவரத்து ஆணையம் பிற்பகல் 2.56 மணிக்கு எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
எதிர்த்திசையிலும் வாகன நெரிசல் காணப்பட்டதால் லோர்னி நோக்குச் செல்லும் பிரேடல் ரோட்டின் வலது தடத்தைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டுநர்களை ஆணையம் கேட்டுக்கொண்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் பிற்பகல் 3.10 மணிவாக்கில் விபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்றபோது, விபத்தில் சிக்கி சேதமடைந்த இரு லாரிகளும் சாலையில் கிடந்ததைக் கண்டார்.
பிற்பகல் 3.30 மணியளவில் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பியது. விபத்து நிகழ்ந்தது தொடர்பான விசாரணை தொடருகிறது.

