உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே திங்கட்கிழமை (செப்டம்பர் 23) இரவு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன.
இதில் இரு ஆடவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் விபத்து ஏற்பட்டதாக தங்களுக்கு இரவு 7.25 மணிவாக்கில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்நிலையில், விபத்து தொடர்பாக 24 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) தெரிவித்தது.
இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் வயது 30, 46 என்று காவல்துறை தெரிவித்தது.
விபத்து காரணமாக உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி நோக்கிச் செல்லும் இரண்டு மோட்டார் சைக்கிள் தடங்களில் ஒரு தடம் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் மூடப்பட்டது. அதன் பின்னர் அது மீண்டும் திறக்கப்பட்டது.
விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

