மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நாய்களைக் கடத்தி வந்த தம்பதிக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எளிதாகவும் விரைவாகவும் லாபம் ஈட்ட இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் தம்பதி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
சூன் பூன் கோங், 28, ரெய்னா வோங், 28, தம்பதி ஒவ்வொரு முறையும் மலேசியாவிலிருந்து நாயை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்து விற்றதில் 900 முதல் 1000 வெள்ளி வரை சம்பாதித்துள்ளனர்.
தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தம்பதி ஒப்புக்கொண்டதால் அவர்களுக்குப் புதன்கிழமை (ஜூன் 4) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளைத் தகுந்த உரிமம் இல்லாமல் விற்பது பொதுச் சுகாதாரத்திற்குப் பிரச்சினை ஏற்படுத்தலாம் அது நாட்டிற்குப் பெரிய பாதிப்பைத் தரக்கூடும் என்று நீதிபதி தெரிவித்தார்.
தம்பதியிடம் நாயை வாங்கிய டோக் சூ வென் என்னும் வாடிக்கையாளருக்குக் கடந்த டிசம்பர் மாதம் 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து தம்பதி குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம்பதி ஜோகூர் பாருவில் உள்ள செல்லப் பிராணி கடையிலிருந்து இரண்டு நாய்களை வாங்கி சிங்கப்பூருக்குள் கொண்டு வரும்போது உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் தம்பதியர் பிடிபட்டனர்.