அனுமதி பெறாமல் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்தானா வரை ஊர்வலமாகச் செல்ல ஏற்பாடு செய்தததாக மூன்று பெண்கள் மீது ஜூன் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
29 வயது சித்தி அமிரா முகம்மது அஸ்ரோரி, 25 வயது மொசாம்மாட் சொபிக்குன் நஹார், 36 வயது அண்ணாமலை கோகிலா பார்வதி ஆகிய மூவரும் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வழக்கு கோரியுள்ளதாக செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மூவரும் செப்டம்பர் 18ஆம் தேதி காலை அரசு நீதிமன்றத்துக்குச் சென்றனர்.
பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் அந்த மூன்று சிங்கப்பூர் பெண்கள் மீதும் கடந்த ஜூன் மாதம் குற்றம் சுமத்தப்பட்டது.
இஸ்தானா அருகில் பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்த மூன்று பெண்கள் ஏற்பாடு செய்த ஊர்வலம் இடம்பெற்றது.
ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ததாக சித்தி, மொசாம்மாட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கோகிலா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சித்தி, மொசாம்மாட் ஆகியோருடன் அலிசா முகம்மது ரஹ்மாட் ஷா, அனிஸ்டாஷே முகம்மது ரஹமாட் ஷா மற்றும் அடையாளம் தெரியாத மற்றவர்களுடன் கோகிலா இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைத்தொகுதிக்கு வெளியே ஏறத்தாழ 70 பேர் கூடி அங்கிருந்து இஸ்தானாவை நோக்கி நடந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.
ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தர்ப்பூசணிப் பழப் படங்களைக் கொண்ட குடைகளைத் தூக்கிக்கொண்டு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தர்ப்பூசணிப் பழங்களின் நிறங்களைப் பாலஸ்தீனத்தின் கொடி கொண்டுள்ளது.
எனவே, பாலஸ்தீன ஒருமைப்பாட்டின் சின்னமாக தர்ப்பூசணிப் பழம் திகழ்கிறது.
இந்த மூன்று பெண்கள் தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் வழக்கிற்கு முந்தைய கலந்துரைடல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பலாம்.