மாடி விளிம்பில் 3 வயது சிறுவன்; காப்பாற்றிய ஆடவர்

மாடி விளிம்பில் 3 வயது சிறுவன்; காப்பாற்றிய ஆடவர்

2 mins read
144fdc4e-7e73-4986-8e26-d9818c8b89ed
சன்னல் ஓரம் நின்றுகொண்டிருந்த சிறுவனை ஆடவர் ஒருவர் மெதுவாக சுவர்களின் ஓரம் சென்று பத்திரமாக மீட்டார். - படம்: ஃபேஸ்புக்

கேன்பரா ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் மாடி விளிம்பில் தனியாக நின்றுகொண்டிருந்த 3 வயது சிறுவனை ஆடவர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றினார்.

இச்சம்பவம் குறித்த காணொளி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

காணொளியில் சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் மூன்றாவது மாடியில் உள்ள சன்னலுக்கு வெளியே உள்ள திட்டில் நின்றுகொண்டிருந்தான்.

சிறுவன் கீழே விழுந்தால் பத்திரமாக பிடிக்க பொதுமக்கள் சிலர் போர்வைகளைக் கொண்டு தரையில் காத்திருந்தனர்.

அதே நேரம் ஆடவர் ஒருவர் மெதுவாக சுவர்களின் ஓரம் சென்று மாடி விளிம்பில் இருந்த சிறுவனை பத்திரமாக மீட்டார்.

சன்னல் ஓரம் நின்றுகொண்டிருந்த சிறுவனை சன்னல் வழியாக வீட்டிற்குள் தள்ளினார் அந்த ஆடவர்.

“சிறுவன் விளிம்பில் நின்றுகொண்டிருந்தபோது சில குடியிருப்பாளர்கள் சிறுவனின் வீட்டிற்குச் சென்று கதவுகளைத் தட்டினர். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இருப்பினும் சிறுவனை மீட்ட ஆடவர், வீட்டிற்குள் ஒருவர் இருந்ததாக தெரிவித்தார்,” என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து தங்களுக்கு காலை 11.50 மணி வாக்கில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து கேன்பரா ரோட்டில் உள்ள புளோக் 350Cக்கு அதிகாரிகள் விரைந்ததாக அது கூறியது.

அதிகாரிகள் அங்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதாக அது தெரிவித்தது.

கவனக்குறைவாக நடந்துகொண்டது தொடர்பாக 25 வயது பெண்ணிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்