பீஷானில் உள்ள ஆள்துளைக்குள் வெடிப்புச் சத்தம் கேட்பதாகப் புகார் செய்யப்பட்டதை அடுத்து, அவ்வட்டாரத்தில் வசிக்கும் ஏறத்தாழ 30 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (பிப்ரவரி 22) காலை நிகழ்ந்தது.
காலை 11.20 மணி அளவில் பீஷான் ஸ்திரீட் 21க்கு அருகில் உள்ள எண் 34 கின்சாங் ரைசிலிருந்து உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் வெப்ப உணர்கருவியைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஆள்துளையைச் சோதனையிட்டனர். அதிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பம் வெளிப்படுவது தெரியவந்தது.
சோதனை நடத்தப்பட்டபோது ஆள்துளைக்குள் தீப்பற்றி எரியவில்லை என்றபோதிலும் அதற்குள் இருந்த மின்வடங்களின் மின்காப்புகள் தீயில் சற்று கருகியிருந்ததைக் காண முடிந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இந்த மின்வடங்கள் தொலைத்தொடர்பு இணைப்புக்காக அங்கு பொருத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வெப்பத்தைத் தணிக்க ஆள்துளைக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.
தீங்கு, அபாயம் விளைவிக்கக்கூடிய பொருள்கள் அதற்குள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


