தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலாசார சிறப்புத் தொகை: சிங்கப்பூரர், நிரந்தரவாசிகளின் கலை, பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு $300 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
beb879b9-c0a8-46a5-9b7e-20ca04bf13a2
உள்ளூர் கலை, கலாசாரப் படைப்புகளுக்கு உத்வேகமளிக்கும் வகையில் சிறப்புத் தொகை வழங்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகைக்கு மொத்தம் $300 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.

உள்ளூர் கலை நிகழ்ச்சிகள், படைப்புகள், கண்காட்சிகளை சிங்கப்பூரர்கள் கண்டுகளிக்கவும் கலாசார அனுபவங்களைப் பெறவும் இத்தொகை வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரின் கலை, பாரம்பரிய துறையை இலக்காகக் கொண்டு முதல் முறையாக இம்முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் தலா $100 கலாசார சிறப்புத் தொகை வழங்கப்படும். சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் முக்கிய பங்காற்றும் கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம்.

மெய்நிகர் நிகழ்ச்சிகள் அல்லாத நேரடியாக நடைபெறும் நிகழ்ச்சிகளை நோக்கமாகக் கொண்டு சிறப்புத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நுழைவுச் சீட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்கள் வழியாக விற்கப்பட வேண்டும்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், பிப்ரவரி 21ஆம் தேதி கலைகள், கலாசாரத் துறைக்கான விவரங்களை வெளியிட்டார்.

உள்ளூர் நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கேற்காதவர்களைப் பங்கேற்கச் செய்வதே திட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.

முதல் முறையாக கலாசார அனுபவங்களைப் பெற்றவர்கள் மீண்டும் அத்தகைய அனுபவத்தைப் பெற திரும்பி வருவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்டெல் வாட்டர்ஃபிரண்ட் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள், போட்டிபோட்டு புதிய பார்வையாளர்களைச் சென்றடைவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“இந்தச் சவால்களை ஏற்றுக் கொள்ள அனைவரையும் ஊக்குவிக்கிறேன். சிறந்த கலை, பாரம்பரிய நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, தக்க வைத்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அமைச்சர் எட்வின் டோங் மேலும் தெரிவித்தார்.

சென்ற பிப்ரவரி 18ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங், வரவுசெலவுத் திட்டத்தில் எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை அறிவிப்பை வெளியிட்டார்.

இது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்குத் தகுதியான உள்ளூர் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலைத் தொடர்பான கற்றல் பயணங்கள், பயிலரங்குகள் போன்ற அனுபவங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்க $100 சிறப்புத் தொகையை வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்