தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிடிஓ வீடுகளுக்குக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு வாடகைப் பற்றுச்சீட்டுகள்

2 mins read
0b0a1cc0-9e75-480f-951f-e31316cf8643
பிள்ளைபேற்றுக்கான இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் உள்ள அந்தத் திட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்வரை நடப்பில் இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக (பிடிஓ) காத்திருக்கும் தகுதிபெறும் குடும்பங்கள் பொதுச் சந்தையில் கிடைக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு அல்லது அறைக்கான வாடகைக் கட்டணத்தை ஈடுசெய்ய, விரைவில் மாதம் $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டைப் பயன்படுத்தமுடியும்.

பிள்ளைபேற்றுக்கான இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் அதற்கான திட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்வரை நடப்பில் இருக்கும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தகுதிபெறும் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்க நோக்கம் கொண்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் பிள்ளைபேற்றுக்கான இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் உள்ள தற்காலிக வீடுகளின் எண்ணிக்கையில், தங்ளின் ஹால்ட்டில் மேலும் 2,000 காலியான வீடுகளை வீவக சேர்த்துவருகிறது.

தற்போது, அந்தத் திட்டத்தின்கீழ் வீவக ஏறக்குறைய 2,000 இடைக்கால வாடகை வீடுகளைக் கொண்டுள்ளது.

வீவகவின் விற்பனைத் திட்டங்களில் கட்டிமுடிக்கப்படாத வீடுகளுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு, பிள்ளைபேற்றுக்கான இடைக்கால குடியிருப்புத் திட்டம் இடைக்கால வாடகை வீடுகளை வழங்குகிறது.

அந்தக் குடும்பங்களுக்கு மாதாந்திரக் குடும்ப வருமானம் $7,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கவேண்டும்.

பொதுச் சந்தைப் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெற குடும்பங்கள் இந்தத் தகுதிவிதிகளைப் பூர்த்திசெய்யவேண்டும். அதோடு, அவர்கள் விண்ணப்பிக்கும்போது வீவகவுடன் வாடகை குத்தகை ஒன்றைப் பதிவுசெய்திருக்க வேண்டும்.

பொதுச் சந்தையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுப்பதற்கான செலவைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவ, பற்றுச்சீட்டின் தொகை கவனமாக மதிப்பிடப்பட்டதாக திரு லீ கூறினார்.

வாடகைச் சந்தையில் பற்றுச்சீட்டின் தாக்கத்தை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முழு ஆண்டுக்குமான ஆதரவுக்குத் தகுதிபெற்றால், தகுதிபெறும் குடும்பங்கள் $3,600 வரை பெறும்.

குறிப்புச் சொற்கள்
பற்றுச்சீட்டுவாடகை வீடுவரவுசெலவுத் திட்டம்