ஆர்ச்சர்ட் ரோட்டில் 3,000 பேர் அமரும் புதிய இசை அரங்கம் ஈராண்டில் தயாராகும்

ஆர்ச்சர்ட் ரோட்டில் 3,000 பேர் அமரும் புதிய இசை அரங்கம் ஈராண்டில் தயாராகும்

2 mins read
59fefbb5-e220-4b7a-8637-b996a5e93069
கிரேஞ்ச் ரோடு, சோமர்செட் ரோடு சந்திப்பில் புதிய இசைக்கூடம் எழுப்பப்பட்டு வருகிறது. - படம்: லைவ் நேஷன்

ஆர்ச்சர்ட் ரோட்டில் எழுப்பப்பட்டு வரும் புதிய இசை அரங்கம், பல்லாண்டுகால தாமதத்திற்குப் பிறகு 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ‘லைவ் நேஷன்’ உருவாக்கி வரும் புதிய இசை அரங்கத்தில் 3,000 பேர் வரை அமர முடியும்.

கிரேஞ்ச் ரோடு, சோமர்செட் ரோடு சந்திப்பில் இதற்கு முன்னர் திறந்தவெளி கார்நிறுத்தும் இடம் இருந்த பகுதியில் அந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆசியாவில் இசைக்காகவே எழுப்பப்படும் பெரிய அரங்கம் அது.

48,200 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் இசை அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகள் 2020ஆம் ஆண்டு தொடங்கின.

அதன் கட்டுமானக் குத்தகை நிறுவனமான ‘எல்ரீட்’ (LReit) 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் பணிகளை முடிக்கவும் அதற்கு முன்னர் தனித்துவ திரையரங்கு, உணவுக்கூடம், பல்நோக்கு நிகழ்வு அரங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரங்கத்தை எழுப்பவும் திட்டமிட்டு இருந்தது.

ஆனால், அதனைக் கட்டுவதற்கான நிலம் 2024 நான்காம் காலாண்டில்தான் தயாராகும் என்று கடந்த ஆண்டு அது தெரிவித்தது.

கொவிட்-19 தொடர்பான காரணங்களாலும் கட்டுமானத் திட்டங்கள் தாமதமடைந்ததாகத் தெரிகிறது.

மனிதவளப் பற்றாக்குறை, கட்டுமானச் செலவு அதிகரிப்பு ஆகியன கொவிட்-19 பெருந்தொற்று பரவலால் ஏற்பட்டன.

அவை தவிர, சோமர்செட் எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றி இசை அரங்கத்தைக் கட்டும் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களும் தாமதத்திற்குக் காரணமாக அமைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.

2020ஆம் ஆண்டு இசை அரங்கக் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது அதற்கான செலவு $10 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.

இருப்பினும், தற்போது அது எந்த அளவுக்கு அதிகரித்து உள்ளது என்ற விவரத்தை லைவ் நேஷன் வெளியிடவில்லை.

ஆர்ச்சர்ட் ரோட்டில் நேரடி இசை நிகழ்ச்சிகளை வழங்க ஏற்கெனவே இயங்கி வரும் இசைக்கூடங்களின் வரிசையில் இன்னும் ஈராண்டில் புதிய அரங்கம் இணைந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்