சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் குப்பை போட்டதன் தொடர்பில் ஏறக்குறைய 3,000 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் சுகாதாரம் பேணவும் மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி மாதத்துக்கும் மார்ச் மாதத்திற்கும் இடையே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக அது கூறியது.
குப்பை அதிகம் கொட்டப்படும் 24 முக்கிய இடங்களில் வாரிய அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பு, திடீர்ச் சோதனைகளை நடத்தினர்.
அந்த இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், விழிப்புணர்வுப் பலகைகள் மற்றும் அதிகாரிகள் நேரடி சுற்றுக்காவல் பணிகள் மூலம் குப்பை போடுவதைத் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அபராதம் விதித்தது மட்டுமன்றி, குப்பை கொட்டிய 150க்கும் மேற்பட்டோருக்குப் பொது இடங்களைச் சுத்தம் செய்யும் ‘சீர்திருத்தப் பணி உத்தரவும்’ (CWO) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ், அவர்கள் குப்பை அதிகம் போடப்படும் இடங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் குப்பை போடுவதன் பின்விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கம்.

