முதலில், சீனாவிலிருந்து வந்த 40 அடி உயரமுள்ள, வான்நீல நிறக் கொள்கலன், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள மலேசிய சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தைக் கொடுக்கவில்லை.
ஆனால் ஜூலை 30ஆம் தேதி, அவர்கள் கொள்கலனைத் திறந்தபோது, உள்ளே மின் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டனர்.
மரச் சாமான்களாக அறிவிக்கப்பட்ட பல பெட்டிகள் பச்சை நிற பாலித்தீன் பைகளில் சீல் வைக்கப்பட்டிருந்தன. மின்சிகரெட் கடத்தல் கும்பல்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை இது. பிலிப்பீன்ஸ் மற்றும் தாய்லாந்திலும் இந்தப் பச்சை நிறப் பைகள் ஏற்கெனவே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள மலேசிய சுங்க அதிகாரிகள் சுமார் 300,000 மின்சிகரெட்டுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பொருள்களைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு RM500,000 (S$152,000) என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சிகரெட் ஏற்றுமதி சிங்கப்பூருக்குச் செல்லவிருந்தது என்று நம்பப்படுவதாக கைது நடவடிக்கையை நன்கு அறிந்த ஒரு புலனாய்வாளர் தெரிவித்தார்.
“இவை சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடையே பிரபலமான விற்பனைச் சின்னங்கள். மலேசியாவிலிருந்து, பொதுவாக மின்சிகரெட் சிங்கப்பூருக்கு சாலை வழியாகக் கடத்தப்படும்,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு புலனாய்வாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடல் வழியாகப் போதைப்பொருள் மற்றும் புகையிலையைக் கடத்துவது குற்றவியல் கும்பல்கள் தங்கள் கடத்தல் பொருள்களை நகர்த்துவதற்கான பல வழிகளில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் முறையான சரக்குகளில் மறைத்து கடத்தப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களுக்காக ஐக்கிய நாட்டு அலுவலகம், ஒருங்கிணைந்த குற்றச்செயல் கும்பல்கள், நிலம் சார்ந்த கடத்தல் வழித்தடங்களையும் கடல் வழிகளையும் இணைத்து, தாய்லாந்து வளைகுடாவிற்குச் செல்லும் பாதை போன்ற அதிக அளவிலான சரக்குகளின் கடல்வழி கடத்தலை அதிகரிப்பதாகத் தெரிவித்தது. இது கீழ் மெக்கோங் பகுதியில் பல நில எல்லைகளைக் கடக்கிறது என்று ஜனவரி 2025ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டது.
ஜூலை 30ஆம் தேதி நடந்த மின்சிகரெட் கடத்தல் தொடர்பான விசாரணையில், சட்டவிரோத மின்சிகரெட் பொருள்களின் கடத்தல், சீனாவில் ஒரு கப்பல் நிறுவனம் மூலம் தொடங்கியது என்பது தெரியவந்தது. அந்த நிறுவனத்திற்கு தொடர்பு எண்கள் அல்லது இணையத்தளம் எதுவும் கிடையாது.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காட்டப்பட்ட கப்பல் அறிக்கையின் அடிப்படையில், மலேசிய சரக்குப் பெறுநரால் அந்த மின்சிகரெட்டுகள் பெற்றுக்கொள்ளப்பட இருந்தன.
இருப்பினும், சரக்குப் பெறுநரின் பதிவுசெய்யப்பட்ட வணிக முகவரியைப் புலனாய்வாளர்கள் பார்வையிட்டபோது, அது அலுவலகம் அல்லது கிடங்கு அல்ல, மாறாக ஒரு வீடு என்பதைக் கண்டறிந்தனர்.
“சிங்கப்பூரில் டெலிகிராம் மற்றும் இணையம்வழி இந்தப் பிரபலமான மின்சிகரெட் வர்த்தகச் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பல தளங்கள் இருப்பதை நாங்கள் அறிவோம்,” என்றும் அவர்கள் கூறினர்.
செப்டம்பர் 1, 2025 முதல் மின்சிகரெட்டுகளை வைத்திருந்த, பயன்படுத்திய, வாங்கிய குற்றத்துக்காகப் பிடிபட்டோர் அதிக அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் மீண்டும் குற்றம் புரிவோர் மறுவாழ்வு பெற வேண்டியிருக்கும்.

