மதுபோதையில் வாகனம் ஓட்டிய 31 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 31 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2 mins read
fa4578f0-b5e2-497d-8da4-7321f960ea25
மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாகனவோட்டிகள் பிடிபட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 31 வாகனவோட்டிகள்மீது இம்மாதம் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அந்த வாகனவோட்டிகளின் வயது 24க்கும் 61க்கும் இடைப்பட்டிருப்பதாகக் காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அறிக்கை சுட்டியது.

மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சுவாசப் பரிசோதனையை அடுத்து வாகனவோட்டிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் இருவர், சாலையில் இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனத்தை நிறுத்தியதற்காகக் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு வயது 28. மற்றவருக்கு 35 வயது.

நிக்கல் நெடுஞ்சாலை, லோரோங் 1 கேலாங் ஆகிய இரு வேறு இடங்களில் ஜூலை 21ஆம் தேதியும் ஜூலை 26ஆம் தேதியும் ஆடவர் இருவரும் வாகனத்தின் சக்கரங்களுக்குப் பின்னால் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

ஆடவரின் அந்தச் செயல் சாலையில் சென்ற சக வாகனவோட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஆடவர் இருவரும் மதுபானம் அருந்திய பிறகு வாகனத்தை ஓட்டியதும் கண்டறியப்பட்டது.

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $2,000யிலிருந்து $10,000 வரையிலான அபராதம், 12 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

அதே குற்றத்தை மீண்டும் புரிவோருக்கு $5,000லிருந்து $20,000 வரையிலான அபராதமும் அதிகபட்சம் ஈராண்டுவரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படக்கூடும். அவர்கள் அனைத்துவித வாகனங்களை ஓட்டுவதிலிருந்து தடைசெய்யப்படலாம்.

இம்மாதம் 4ஆம் தேதி, நாடாளுமன்றம் புதிய போக்குவரத்துச் சட்டங்களை நிறைவேற்றியது. அதன்கீழ் ஓட்டுநர்களுக்கான மது வரம்பு பாதிக்கும்மேல் குறைக்கப்பட்டது.

இதற்குமுன் 100 மில்லிலிட்டர் மூச்சுக் காற்றில் 35 மைக்ரோகிராம் வரையிலான மது அனுமதிக்கப்பட்டது. இனி அது 15 மைக்ரோகிராமாகக் குறைக்கப்பட்டது.

அதேபோல 100 மில்லி ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட 80 மில்லிகிராம் மதுவின் அளவு 30 மில்லிகிராமாகக் குறைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மதுபானம்வாகனம்ஓட்டுநர்