சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலில் 31 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற செல்லவுள்ளனர்.
இத்தேர்தலில் ஆக அதிகமான அளவில் ஒன்பது கட்சிகளின் சார்பில் 53 பெண்கள் போட்டியிட்டனர்.
இம்முறை நாடாளுமன்றத்தில் 31.9 விழுக்காட்டினர் பெண்களாக இருப்பர். இது கடந்த முறை இருந்த 29 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.
மக்கள் செயல் கட்சி சார்பில் அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்திராணி ராஜா, ரேச்சல் ஓங், போ லி சான், மேயர் டெனிஸ் புவா உள்பட போட்டியிட்டோரில் 29 பெண்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மக்கள் செயல் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட 32 பெண் வேட்பாளர்களில் 13 பேர் முதன்முறை போட்டியிட்டனர். அவர்களில் 11 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
பாட்டாளிக் கட்சியில் ஆறு பெண்கள் போட்டியிட்ட நிலையில் இரு பெண்கள் வென்று நாடாளுமன்றம் செல்கின்றனர். அக்கட்சியிலிருந்து சில்வியா லிம், ஹி டிங் ரூ ஆகிய இருவரும் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு பெண் வேட்பாளரைக் களமிறக்கின. இருவரும் முதன்முறை போட்டிட்டனர். ஆனால் இருவரும் வெற்றி பெறவில்லை.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி களமிறக்கிய மூன்று பெண்களில் ஒருவர் புதுமுகம். சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் நின்ற இரு பெண்களில் ஒருவரும், ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியில் போட்டியிட்ட நான்கு பெண்களில் இருவரும் புதுமுகங்கள். அவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை.
தொடர்புடைய செய்திகள்
போட்டியிட்ட மொத்தம் 53 பெண் வேட்பாளர்களில் 58.4 விழுக்காட்டினர் வென்றுள்ளனர்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட 40 பெண்களில் 27 பேர் வென்று நாடாளுமன்றம் சென்றனர். போட்டியிட்டோரில் 67.5 விழுக்காட்டினர் வெற்றிவாகை சூடினர். கடந்த தேர்தலில் 93 இடங்களுக்காக 192 பேர் போட்டியிட்ட நிலையில் 27 பெண்கள் வென்றனர்.

