போலி நட்பு அழைப்பு மூலம் மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் குறைந்தபட்சம் $311,000 இழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதிரியான மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் இதுவரை குறைந்தபட்சம் 146 போலி நட்பு மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
திடீரென்று ஏதோ ஓர் அழைப்பு வரும். தம்மை யாரென ஊகிக்குமாறு அந்த அழைப்பில் இருப்பவர் கேட்பார். அழைப்பைப் பெற்றவர் தமக்குத் தெரிந்த ஒருவருடன் அந்தக் குரலைப் பொருத்தி அடையாளம் காண முயல்வார். அப்படிப்பட்ட ஒருவரின் பெயரைச் சொன்னதும் ‘ஆம் அது நான்தான்’ என்று மோசடி அழைப்பைச் செய்தவர் கூறுவார்.
பின்னர் அவசரத் தேவைக்காகப் பணம் தேவைப்படும் என்று பாசாங்கு செய்து வங்கி மூலம் பணம் அனுப்புமாறு மீண்டும் அந்த மோசடிக்காரர் தொடர்புகொள்வார்.
பணம் அனுப்பப்பட வேண்டிய வங்கிக் கணக்கு எண், ‘பேநவ்’ எண் அல்லது கியூஆர் குறியீடு ஆகியவற்றை அவர் தருவார்.
பணம் அனுப்புவதற்கு முன்னரோ அனுப்பிய பின்னரோ தமது உண்மை நண்பரைத் தொடர்புகொள்ளும்போதுதான், முன்னர் அழைப்பில் வந்தவர் மோசடிக்காரர் என்பது தெரியவரும்.
மோசடி செய்யப்படும் விவரத்தைக் காவல்துறை இவ்வாறு விளக்கியுள்ளது.

