சொகுசு பொருள் விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்ட தாய்லாந்து பெண் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை திங்கட்கிழமை (அக்டோபர் 21) ஒப்புக்கொண்டார்.
30 வயது பன்சுக் சிரிவிப்பா மீது மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது என 180 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதில் 30 குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கொண்டார்.
பன்சுக்காவால் 166 பேர் ஏமாற்றப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பன்சிக்கிற்கு அக்டோபர் 29ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். அவருக்கு 14 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பன்சுக்கின் கணவர் பி ஜியாபெங் (29) மீதும் ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூரரான ஜியாபெங் மீது விசாரணை தொடர்கிறது.
தம்பதி சொகுசுப் பொருள்களை விற்கும் Tradenation மற்றும் Tradeluxury நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
விலை உயர்ந்த பொருள்களுக்காகப் பணத்தை செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை வழங்காமல் அந்தப் பணத்தை கொண்டு ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தினர் அத்தம்பதியர்.
முதலில் சரியாக வர்த்தகம் செய்த தம்பதியர் 2022ஆம் ஆண்டில் மோசடி வேலையில் இறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
பன்சுக், 24.7 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருள்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றார். அதே காலகட்டத்தில் அவர் சொகுசு பொருள்களை வாடிக்கையாளர்களிடம் வாங்கி 9.3 மில்லியன் வெள்ளி ஏமாற்றினார்.
தங்களுக்கு பொருள்கள் வராததால் வாடிக்கையாளர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து அந்தத் தம்பதி மலேசியாவுக்குத் தப்பியோடியது. காவல்துறையின் ஒரு மாத தீவிர தேடுதலுக்குப் பிறகு 2022 ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி தம்பதி மலேசியாவில் கைது செய்யப்பட்டது.