15 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 323 பேர் மோசடி செய்பவர்களாக அல்லது மோசடிக்கு உதவியவர்களாகக் கருதப்படும் விசாரணையில் உள்ளனர். இவர்கள் 1,100க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று காவல்துறை கூறியது.
வர்த்தக விவாகரங்களுக்கான குற்றப்பிரிவு மற்றும் ஏழு காவல்துறைப் பிரிவுகளின் அதிகாரிகளால் ஜூலை 19 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வாரச் சோதனை நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோசடி, பணமோசடி அல்லது உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்குதல் போன்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்குச் சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
“மோசடிகளில் ஈடுபடக்கூடிய எந்தவொரு நபருக்கும் எதிராக காவல்துறை தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கும். மேலும், குற்றவாளிகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார்கள்,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் $651.8 மில்லியன் பணத்தை இழந்துள்ளனர்.
குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது தங்கள் கைப்பேசியைப் பயன்படுத்த பிறர் வைக்கும் கோரிக்கைகளை எப்போதும் நிராகரிக்க வேண்டும். இது குற்றங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள் scamalert.sg என்ற பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடிக்கு எதிரான உதவி எண்ணை அழைக்கலாம்.
இதுபோன்ற மோசடிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையத் தளத்தில் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.
பெறப்படும் அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்தது.