சிங்கப்பூரில் கணவரின் நிறுவனம் வளர்வதற்காக முழுநேர வேலையைக் கைவிட்டு வீட்டைப் பார்த்துக்கொண்ட 44 வயதுப் பெண்ணுக்கு $2.2 மில்லியன் ஜீவனாம்சத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமது 45 வயது கணவரை விவாகரத்து செய்த அந்தப் பெண்ணுக்குத் திருமணச் சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுக்கும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கணவன், மனைவி இருவரும் இணைந்து சேர்த்த அந்தச் சொத்தில் கிட்டத்தட்ட 5.9 விழுக்காடு, அதாவது $400,000 பெண்ணிடமிருந்து நேரடியாக வந்தது என்று உயர் நீதிமன்ற நீதிபதி டெடார் சிங் கில் கூறினார்.
இம்மாதம் 20ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி கில், சொத்தைச் சேர்க்க கணவர் அளித்த பங்குக் கிட்டத்தட்ட $6.4 மில்லியன் என்றார்.
கணவருக்கு முழுமையான ஆதரவை வழங்க முழுநேர வேலையைக் கைவிட்ட பெண், கணவரின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததையும் நீதிபதி கில் சுட்டினார்.
அத்துடன், வீட்டில் உள்ள மூன்று பிள்ளைகளையும் மனைவி பராமரித்ததை நீதிபதி கில் குறிப்பிட்டார். ஒன்பதிலிருந்து 16 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளின் படிப்பைக் கவனித்துக்கொண்டது, வீட்டையும் இல்லப் பணிப்பெண்ணையும் நிர்வகித்தது ஆகிய வேலைகளையும் மனைவி பார்த்துக்கொண்டார்.
அதன் விளைவாக, நிறுவனத்தை வளர்ப்பதில் கணவரால் முழு கவனத்தையும் செலுத்த முடிந்தது என்ற நீதிபதி கில், நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை மனைவி பார்த்துக்கொண்டதாலும்தான் அது சாத்தியமானது என்றார்.
2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தம்பதி, 2023ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதையடுத்து 2020ஆம் ஆண்டு கணவரின் நிறுவனம் விற்கப்பட்டது. நிறுவனத்தின் பெயரை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
விவாகரத்துக்கான நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்னர் கணவர் நிதி ரீதியான சில பரிவர்த்தனைகளைச் செய்தார். ஆனால், அதன் விவரங்களை அவர் நீதிமன்றத்திடமிருந்து மறைத்ததாக நீதிபதி கில் குறிப்பிட்டார்.
வழக்கின்போதுதான் திருமணக் கடன்களை அடைக்க பெருந்தொகையைத் தமது தந்தைக்குத் தாம் அனுப்பியதாகக் கணவர் விளக்கம் அளித்தார்.
நிதிப் பரிவர்த்தனை குறித்த விளக்கத்தை முன்கூட்டியே அளிக்கத் தவறியதும் அதுகுறித்த ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருந்ததும் ஏற்க முடியாதது என்று நீதிபதி கில் தெரிவித்தார்.
கணவரின் பொறுப்பற்ற செயலால் வழக்கு விசாரணையில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டதாகக் கூறிய நீதிபதி, மனைவிக்கு அந்தக் கணவர் $5,000 தொகையை வழங்கும்படியும் உத்தரவிட்டார்.


