மூன்று நாள் சோதனையில் சிக்கிய 340 மின்சிகரெட்டுகள்: ஐசிஏ

2 mins read
80312180-d09b-42d1-bbfd-082986a5c4a6
ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 340க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. - படம்: குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம்

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம், மூன்று நாள்களில் 340க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளையும் அது தொடர்பான கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளது.

அதை முன்னிட்டு மின்சிகரெட் புகைப்பது சிங்கப்பூரில் சட்டவிரோதம் என்பதைச் சிங்கப்பூருக்கு வரும் அல்லது சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டினருக்கு ஆணையம் நினைவூட்டியது.

சிங்கப்பூர்ச் சோதனைச் சாவடிகளில் நடத்தப்படும் சோதனைகள் மூலம் மின்சிகரெட்டுக்கு எதிரான அமலாக்க முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதாக ஆணையம் சனிக்கிழமை (ஜனவரி 10) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 57 வெளிநாட்டினரிடம் மின்சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மின்சிகரெட்டுகளின் பாகங்கள் உள்பட 341க்கும் அதிகமான மின்சிகரெட் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்டோரில் கிட்டத்தட்ட 67 விழுக்காட்டினர் குறுகிய கால வருகையாளர்கள் என்றும் ஏறக்குறைய 33 பேர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் என்றும் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்பாடு சட்டவிரோதம் என்ற ஆணையம், சிங்கப்பூருக்கு வரும் அல்லது வாழும் வெளிநாட்டினர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி மீண்டும் வலியுறுத்தியது.

மின்சிகரெட் வைத்திருந்தாலோ அவற்றைப் பயன்படுத்தினாலோ விற்பனை செய்தாலோ கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆணையம் எச்சரித்தது.

குறுகிய கால வருகையாளர்கள் மின்சிகரெட்டுடன் இரண்டாவது முறை பிடிபட்டால் சிங்கப்பூருக்குள் நுழைவதற்குத் தடை செய்யப்படலாம்.

மின்சிகரெட்டுடன் மீண்டும் பிடிபடும் நீண்ட கால குடியிருப்பாளர்களின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்ப அனுப்பப்படலாம். மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவும் அத்தகையோருக்குத் தடை விதிக்கப்படக்கூடும்.

சோதனைச் சாவடிகளுக்குப் பதற்றத்துடன் வரும் ஓட்டுநர்களிடமும் பயணிகளிடமும் வழக்கமாகக் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மின்சிகரெட் தொடர்பான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்