$343,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

1 mins read
b8e017d6-a10d-41d5-b5da-016a4c2ecad9
பிடோக் நார்த் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2.8 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஆகஸ்ட் 30ஆம் தேதி கைப்பற்றினர். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஆகஸ்ட் 30ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் $343,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செப்டம்பர் 2ஆம் தேதி தெரிவித்தது.

பிடோக் நார்த் அவென்யூ 4ல் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகச் சந்தேகிக்கப்பட்டது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிற்பகலில் அங்குச் சோதனை நடத்தினர்.

அந்த வீட்டிலிருந்து ஏறக்குறைய 2.8 கிலோகிராம் ஹெராயினுடன் ‘ஐஸ்’, ‘எக்ஸ்டசி’, கஞ்சா போன்ற போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அந்த வீட்டில் இருந்த 38 வயதுப் பெண்ணையும் 41 வயது ஆடவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 1,550 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தப் போதிய அளவிலானது என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் யாரும் தானாகவோ பிறர் சார்பாகவோ, தடை செய்யப்பட்ட போதைப்பொருளைக் கடத்தினாலோ கடத்த முன்வந்தாலோ அதற்கு உடந்தையான நடவடிக்கைகளில் ஈடுபட முன்வந்தாலோ அது குற்றமாகும். இத்தகையவர் சிங்கப்பூரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு இது பொருந்தும்.

15 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் அல்லது 250 கிராமுக்கு அதிகமான ‘மெத்தாம்ஃபிடமின்’ போதைப்பொருளைக் கடத்தியதாக நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்