நடமாட்டச் சாதனங்கள் தொடர்பில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி 2023ஆம் ஆண்டில் 5,228 குற்றங்கள் பதிவாகின. 2021ல் பதிவான 8,014 குற்றங்களை ஒப்பிடுகையில் இது 35% சரிவாகும். 2022ஆம் ஆண்டு பதிவான 6,996 குற்றங்களைக் காட்டிலும் கடந்த ஆண்டில் 25% சரிவு ஏற்பட்டது.
மின்சார மிதிவண்டி அல்லது மோட்டார் பொருத்தப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனத்தை நடைபாதையில் ஓட்டுதல், பொது நடைபாதையில் விதிமுறைக்கு உட்படாத ஒரு நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்துதல், அடிப்படை எழுத்துப்பூர்வ தேர்வுச் சான்றிதழின்றி மின்சார மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டரை ஓட்டுதல் ஆகிய குற்றங்களே அதிகம் பதிவாகியுள்ளன.
விதிமுறைக்கு உட்படாத சாதனங்கள் பொதுவாகச் சட்டவிரோத முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பவை. இவை பாதுகாப்புத் தரநிலைகளுக்கும் உட்பட்டிருக்கா.
மின்-ஸ்கூட்டர் உள்பட மோட்டார் பொருத்தப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைபாதைகளில் செல்லத் தடைவிதிக்கப்பட்டன. மிதிவண்டிப் பாதைகளில் மட்டுமே அவை செல்ல முடியும்.
இதற்கிடையே, ‘பிரேக்’ இல்லாத மிதிவண்டியை பொது நடைபாதை அல்லது சாலையில் ஓட்டுவதும் குற்றமாகும்.
இந்த விதிமுறை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ‘பிரேக்’ இல்லாத மிதிவண்டிகளை ஓட்டிக் குற்றம் புரிந்தவர்கள் 473 என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகஸ்ட் 2023ல் தெரிவித்தது.
இந்நிலையில், குறுக்குவழியைச் சில சமயம் நாட வேண்டியுள்ளதாக உணவு விநியோக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அமலாக்க அதிகாரிகள் தங்களை நிறுத்தி அபராதம் விதித்துள்ள நிலையிலும் வசதியாக இருப்பதனாலும் நேர நெருக்கடியாலும் விநியோகத்தை விரைந்து முடிக்க உணவு விநியோக ஊழியர்கள் விதிமுறையை மீறுவதாகக் கூறியுள்ளனர்.


