தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேலாங்கில் காவல்துறை சோதனை: 35 பேரிடம் விசாரணை

1 mins read
ae7d5a28-070a-4132-b3ed-757d54627ea5
கேலாங் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கையில் சூதாட்டப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கேலாங்கில் மார்ச் மாதம் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, மொத்தம் 35 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் 16 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 23ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடையே அந்தச் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.

மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத் துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அவற்றில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரிக்கப்படும் 23 ஆடவர்களும் 12 பெண்களும் 17க்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அபராதம் விதிக்கப்பட்டவர்கள் 18க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கேலாங் பகுதியில் நடத்தப்படும் சட்டவிரோத, குற்றச் செயல்களைத் தடுப்பதே சோதனை நடவடிக்கைகளின் நோக்கம் என்று காவல்துறை கூறியது. சட்டவிரோதச் சூதாட்டம், பாலியல் தொடர்பான சட்டவிரோதப் பொருள்களை விற்பது உள்ளிட்ட குற்றச் செயல்கள் அவற்றில் அடங்கும்.

மார்ச் 23ஆம் தேதி நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையில், $146,560க்கும் மேலான ரொக்கம், சூதாட்டப் பொருள்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

மூன்று நாள்களுக்குப் பிறகு, வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக, 72 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்; 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தச் சோதனை நடவடிக்கையில் அதிகாரிகள் 152 வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்