சிங்கப்பூரில் உள்ள புதிய பட்டதாரிகளில் ஏறக்குறைய 350 பேர் பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்புத் திட்டத்தின்கீழ், அது சாத்தியமாகியிருக்கிறது.
உற்பத்தி, நிதிச் சேவை, தகவல், தொடர்புத் தொழில்நுட்பம், நிபுணத்துவச் சேவை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவற்றுள் அடங்கும். டிபிஎஸ் வங்கி, லிங்க்ட்இன் சிங்கப்பூர், ஓசிபிசி, ரேஸர் ஏஷியா-பசிபிக், யுஓபி, சேட்ஸ், எஸ்டி இன்ஜினியரிங் முதலியவை அவற்றுள் சில.
பட்டதாரித் தொழில்துறை வேலைப் பயிற்சித் திட்டத்தை அமைச்சும் ஊழியரணி அமைப்பும் சென்ற ஆண்டு (2025) அக்டோபர் மாதம் தொடங்கின. பட்டதாரிகள், நேரடி வேலை அனுபவத்தைப் பெறுவதற்கு உதவுவது நோக்கம். அவர்களுக்கு மூன்றிலிருந்து ஆறு மாதம் வரை முறையான கட்டமைப்பின்கீழ் வேலைப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறும் காலத்தில் பட்டதாரிகளுக்குப் படித்தொகையும் தரப்படும். அவர்கள் முழு நேர வேலையில் சேர்வதற்கும் அது துணைபுரியும்.
பல்வேறு பிரிவுகளில் பலதரப்பட்ட திறன்களைப் பட்டதாரிகள் கற்றுக்கொள்ளலாம்.
அரசாங்கத் துறையிலும் அந்த வேலைப் பயிற்சித் திட்டம் வழங்கப்படுகிறது. அரசாங்கத் துறையின் 60 அமைப்புகள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. புதிய பட்டதாரிகளை வேலைப் பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொதுச் சேவைப் பிரிவு ஒருங்கிணைக்கிறது.
தேசிய நூலக வாரியம், நகர மறுசீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி, மனிதவள அமைச்சு, தற்காப்பு அமைச்சு, கல்வியமைச்சு முதலியவை திட்டத்தில் பங்கெடுக்கின்றன.
முதல் வேலை குறித்த இளையவர்களின் அக்கறைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்த அடியை எடுத்துவைக்க ஆர்வத்துடன் இருப்போருக்குப் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பது நம்பிக்கை தரும் அறிகுறி,” என்றார் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்ப நிறுவனமான தேல்ஸ் சொல்யூஷன்ஸ் ஏஷியாவிற்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) சென்றபோது அவர் பேசினார். திட்டத்தின்கீழ் அந்நிறுவனம் ஐந்து பட்டதாரிகளைப் பயிற்சியாளர்களாகச் சேர்த்துக்கொண்டுள்ளது.
தற்காப்பு, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, மின்னிலக்க அடையாளம் போன்ற துறைகளில் அந்நிறுவனம் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குகிறது.
கடந்த ஆண்டின் (2025) ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நிபுணத்துவ, மேலாளர், நிர்வாக, தொழில்நுட்பப் பொறுப்புகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை 31,000இலிருந்து 39,000க்குக் கூடியதாக டாக்டர் டான் சொன்னார்.
“சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை சென்ற ஆண்டில் மீள்திறனுடன் செயல்பட்டது. இந்த ஆண்டிலும் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.
போன ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் பத்தில் ஏழு பேருக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதையும் அவர் சுட்டினார்.
“வேலை தேடுவதில் பட்டதாரிகள் அனைவருக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம்,” என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

