கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் சம்பவம் என்ற சந்தேகம் எழுந்தபோதும் தன் வாடிக்கையாளர்களைச் சரிபார்க்கத் தவறியதற்காக நகைக்கடை ஒன்றுக்கு $35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, $313,000க்கும் அதிக மதிப்பில் தங்கத்தால் ஆன பொருள்களை, சரிபார்ப்பு ஏதுமின்றி விற்றதை ‘கிம் ஹெங் ஜுவல்லர்ஸ் அண்ட் கோல்ட்ஸ்மித்ஸ்’ நவம்பர் 19ஆம் தேதி ஒப்புக்கொண்டது.
இதில், தீங்குநிரல் மென்பொருள் (malware) மூலம் நிகழ்த்தப்பட்ட மோசடிவழி இருவரிடமிருந்து சுமார் $140,000க்கும் மேற்பட்ட தொகையும் அடங்கும்.
ரத்தினக் கற்கள், ரத்தின உலோகங்கள் (பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதித் தடுப்பு) சட்டப்பிரிவு 16ன்கீழ் குற்றஞ்சாட்டப்படும் முதல் வழக்கு இது.
பணமோசடி, பயங்கரவாத நிதியளிப்புக்கு எதிரான கட்டமைப்புக்கு ஏற்ப, அந்தந்த தொழில் பிரிவுக்கே உரிய கண்காணிப்பு, விதிமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் சட்டம் 2019ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
மேலும், சட்டத் திருத்தங்கள்வழி பிப்ரவரி மாதம் இச்சட்டம் மேலும் வலுவாக்கப்பட்டது.
சைனாடவுனில் அமைந்துள்ள பீப்பள்ஸ் பார்க் காம்ப்ளெக்சில் இயங்கிவரும் கிம் ஹெங், 1971ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டதாகவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ரத்தினக் கற்கள், உலோகங்கள் ஆகியவற்றைக் கையாளும் வர்த்தகமாக அது உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர் குறித்து சரிபார்ப்பது தொடர்பாக கிம் ஹெங்கின் ஊழியர்களுக்குப் பயிற்சி ஏதும் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.