தீவு விரைவுச்சாலையில் இரு மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 36 வயது ஆடவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) காலை 6.30 மணியளவில் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலைக்கு இட்டுச்செல்லும் துணைச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய இரு மோட்டார்சைக்கிளோட்டிகளில் ஒருவரான 36 வயது ஆடவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மருத்துவ உதவியாளர் உறுதிசெய்தார். மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டியான 32 வயது ஆடவர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அவர் தற்போது காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.
விபத்து நடந்த இடத்தைக் காட்டும் காணொளி ஒன்று Singapore Roads Accident.com இணையத்தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. விரைவுச்சாலையின் வலது தடத்தில், போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு இழுவை வண்டி, குறைந்தது மூன்று காவல்துறை வாகனங்கள் இருப்பதைக் காண முடிந்தது.
தரையில் சிதறிக்கிடக்கும் உதிரிப் பாகங்களுடன், சேதமடைந்த ஒரு மோட்டார்சைக்கிளையும் அதில் பார்க்க முடிகிறது. மேலும், விபத்து நடந்த இடத்தைச் சுற்றி தடுப்புக் கூம்புகள் வைக்கப்பட்டிருந்ததோடு, சடலத்தை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீல நிறக் கூடாரம் ஒன்றையும் காணொளியில் காண முடிந்தது.

