தொழில்நுட்பத்தின் உதவியுடன் நலமாக மூப்படைய $37.9 மி. திட்டம்

தொழில்நுட்பத்தின் உதவியுடன் நலமாக மூப்படைய $37.9 மி. திட்டம்

2 mins read
818b2b2a-e939-4f98-b01b-5d9c3559a3d0
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உட்லண்டஸ் மருத்துவமனையில் உள்ள கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேலும் ஆரோக்கியமாக மூப்படைய புதிய $37.9 மில்லியன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நொடிகளில் எலும்பு முறிவு அபாயத்தைக் கணிக்கக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி, விழும் அபாயத்தை மதிப்பிடும் அணியக்கூடிய உணர்கருவிகள் ஆகியவை அத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் தீர்வுகளில் அடங்கும்.

‘எதிர்காலச் சுகாதாரத் தொழில்நுட்பங்கள் 2’ எனும் அந்தத் திட்டத்தில் கவனம்செலுத்தப்படும் மூன்று பகுதிகளில் ஒன்று, தசைக்கூட்டுச் சுகாதாரமும் நடமாட்டமும்.

தசைக்கூட்டுப் பிரச்சினைகள் நமது காலத்தில் ஆக அதிகமாகப் புறக்கணிக்கப்படும் சுகாதாரச் சவால்களில் ஒன்று என தேசிய ஆராய்ச்சி அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் லிம் திட்டத்தின் தொடக்கவிழாவில் பேசியபோது கூறினார்.

தசைக்கூட்டுப் பிரச்சினைகள் உலகளவில் 1.7 பில்லியனுக்கும் அதிகமானோரைப் பாதித்து, உடற்குறைபாடுகளுக்கு மிக முக்கியக் காரணமாகத் திகழ்கின்றபோதிலும், அவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

“அந்தத் திட்டம், தசைக்கூட்டுச் சுகாதாரம், மனநலம், மறுவாழ்வு ஆகிய துறைகளில் நம்பிக்கையளிக்கும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் ஆராய்ச்சி முடிவுகளை, 2030ஆம் ஆண்டுக்குள் மருத்துவ நடைமுறைகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார் திரு லிம்.

இந்தத் திட்டம், தேசிய ஆராய்ச்சி அறநிறுவனம், சுவிட்சர்லாந்தின் ‘இடிஎச் ஸுரிக்’ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான சிங்கப்பூர் - இடிஎச் நிலையம் வழிநடத்தும் ஒரு முயற்சியாகும்.

மனநலம் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியம், அத்திட்டம் கவனம்செலுத்தும் இரண்டாவது பகுதியாகும்.

மூன்றாவது பகுதி, மறுவாழ்வு மற்றும் குணமடைதலாகும். பக்கவாதத்திற்குப் பிறகு உடலின் மேற்பகுதியைச் சீரமைப்பதற்கான மறுவாழ்வு சிகிச்சையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதில் அடங்கும்.

‘எதிர்காலச் சுகாதாரத் தொழில்நுட்பங்கள்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் இது.

முதற்கட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது. மார்ச் மாதம் முடிவடைந்த அதில், மறதிநோய்க்கான தொடக்கக்கால அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகள் போன்ற புத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்