ஒரு பெண்ணுக்கு நிறுவனம் தொடங்க உதவ ஒப்புக்கொண்டு தனது பெயரில் நிறுவனம் தொடங்கிய முழுநேர தேசிய சேவையாளருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புரோடிஜிம் டிரேடிங் (Prodigym Trading) என்றழைக்கப்படும் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் மோசடி நடவடிக்கைகளின்வழி ஈட்டப்பட்ட மொத்தம் 274,945 டாலர் (372,110 வெள்ளி) தொகை போடப்பட்டதென்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14லிருந்து 16ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அத்தொகை சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
என். எம். பிரானேஷ் எனும் அந்த 25 வயது ஆடவர்தான் அந்நிறுவனத்தின் ஒரே இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்தார். அவருக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 24) 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், எந்த நிறுவனத்திலும் இயக்குநராக இருக்கவும் அதன் நிர்வாகக் குழுவில் இருப்பதற்கும் அவருக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்தாண்டுகாலம், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடங்கும்.
குற்றத்தை ஒப்புக்கொண்டார்
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பலனடைவதற்கான ஏற்பாட்டில் தான் ஈடுபட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். புரோடிஜிம் நிறுவனத்தின் விவகாரங்களில் எந்த வகையிலும் தான் மேற்பார்வையில் ஈடுபடவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
புரோடிஜிம்மின் கணக்கை சம்பந்தப்பட்ட வங்கி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூடியது. மறுஆண்டு அந்நிறுவனம் முடக்கப்பட்டது.
டெலிகிராம்வழித் தொடர்பு
சம்பந்தப்பட்ட பெண், 2022 ஜனவரி மாதம் பிரேனேஷை டெலிகிராம் செயலிவழித் தொடர்புகொண்டார்.
சிங்கப்பூரில் தனக்காக ஒரு நிறுவனத்தைத் திறக்க உதவ முடியுமா என்று அவர் பிரானேஷைக் கேட்டார். ஜூடி என்ற பெயரில் தம்மை அடையாப்படுத்திக்கொண்ட அவர், முதலீட்டுத் திட்டம் ஒன்றின்கீழ் இரண்டு மாதகாலத்தில் பிரானேஷிடம் 10,000 வெள்ளித் தரவிருப்பதாக உறுதியளித்திருந்தார். சீனாவிலிருந்து வரும் கைக்கடிகாரங்களை விற்க அப்பெண்ணுக்கு உதவ பிரனேஷ் நிறுவனத்தைத் தொடங்குவது திட்டமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பிரானேஷ் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே இந்தப் பிரச்சினை உருவெடுத்தது.
பிரானேஷுக்கான பிணைத் தொகை 20,000 வெள்ளியாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி சிறைத்தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
