முன்னோடி பராமரிப்புத் திட்டங்களில் பயிற்சி பெற்ற 377 பணிப்பெண்கள்

முன்னோடி பராமரிப்புத் திட்டங்களில் பயிற்சி பெற்ற 377 பணிப்பெண்கள்

2 mins read
வீட்டுப் பணிப்பெண்களுக்கான மையம் நடத்தும் முதியோர், குழந்தைகள் பராமரிப்பு, முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகள் பணிப்பெண்களுக்கும் குடும்பங்களும் பயனளிக்கிறது.
764b3d9c-4737-4735-b082-455d058dbc2a
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்ற  வீட்டுப் பணிப்பெண்களுக்கான மையத்தின் 10வது ஆண்டு விழா,  வீட்டுப் பணிப்பெண்கள் மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பணிப்பெண்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் ஒரே முதலாளியிடம் பணியாற்றிய இந்தோனீசியாவைச் சேர்ந்த பிரியாந்தி, 38 தாம் அன்போடு ‘அம்மா’ என்று அழைக்கும் 84 வயது முதியவரிடம் மறதி நோய், பக்கவாத நோய்களுக்கான அறிகுறிகளைக் கண்டறிந்தார்.

அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் பயந்ததாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்கள் மூலம், வீட்டுப் பணிப்பெண்களுக்கான மையம் நடத்திய மறதி நோய் பராமரிப்புப் பயிற்சி பற்றி அறிந்து அதில் சேர்ந்தார், 2025 ஜூலையில் பயிற்சிப் படிப்பை முடித்தார். பயிற்சி மூலம் கோபப்படும் முதியவரை எப்படிக் கையாள்வது, அவரிடம் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக்கொண்டார்.

தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) முயற்சியான வீட்டுப் பணிப்பெண்களுக்கான மையம் நடத்திய நான்கு முன்னோடிப் பராமரிப்புத் திட்டங்களில் பயிற்சி பெற்ற 377 பணிப்பெண்களில் பிரியாந்தியும் ஒருவர்.

மாறிவரும் குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மையம், கடந்த ஓராண்டில் நான்கு முன்னோடிப் பராமரிப்பு பயிற்சித் திட்டங்களை நடத்தியது.

முதியோர், குழந்தைகள் பராமரிப்பு, முதலுதவி போன்ற துறைகளில் $10 பதிவுக் கட்டணத்தில், அவரவர் தாய்மொழியிலேயே இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வீட்டுப் பணிப்பெண்களின் கவலைகளைக் கேட்டறிந்த பிறகே இத்திட்டங்கள் தொடங்கப்பட்டதாக என்டியுசியின் வெளிநாட்டு ஊழியர் பிரிவின் இயக்குநர் மைக்கேல் லிம் கூறினார்.

“இதன் மூலம் எங்களது சகோதரிகளின் (பணிப்பெண்கள்) தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.

மையத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு, வீட்டுப் பணிப்பெண்கள் மே தினக் கொண்டாட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்ற மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட பணிப்பெண்களும் முதலாளிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், பணிப்பெண்களின் அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் பாராட்டினார்.

“பணிப்பெண்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து வாழ்வது எளிதல்ல. இருப்பினும், அவர்கள் நம் அன்புக்குரியவர்களைத் தங்கள் சொந்தக் குடும்பம் போலப் பராமரிக்கிறார்கள்,” என்றார் அவர்.

வீட்டுப் பணிப்பெண்களை ஆதரிப்பதில் மையத்தின் பங்களிப்பை அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்