அரசாங்கத்தின் வசமானது 38 ஆக்ஸ்லி ரோடு வளாகம்

அரசாங்கத்தின் வசமானது 38 ஆக்ஸ்லி ரோடு வளாகம்

2 mins read
79ea5eaf-6f6a-4539-b4c5-a0640a9b1cd6
38 ஆக்ஸ்லி ரோடு வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எண் 38 ஆக்ஸ்லி ரோடு வளாகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அதிகாரபூர்வமாக அரசாங்கத்தின்வசம் சென்றது.

சிங்கப்பூர் நில ஆணையமும் தேசிய மரபுடைமைக் கழகமும் அறிக்கைமூலம் இதனைத் தெரிவித்தன. சிங்கப்பூர் உருவாகக் காரணமாக இருந்த தலைவர்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்திய இடம் அது.

“தேசிய மரபுடைமைக் கழகம் அப்பகுதிக்குத் துல்லியமான ஆய்வை நடத்தும். திரு லீ குவான் யூ விரும்பிய தனிமைக்கு மதிப்பு தரும் வகையில் அவ்விடத்தை எவ்வாறு பொது இடமாக உருமாற்றலாம் என்பதற்கான தெரிவுகளையும் ஆராயும்,” என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன.

“இடைக்காலத்தில் தேவையான பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் அங்குச் செல்ல அனுமதி இருக்காது,” என்றும் அவை குறிப்பிட்டன.

லீ குவான் யூவின் குடும்ப பங்களா

38 ஆக்ஸ்லி ரோடு வளாகத்தில் திரு லீ குவான் யூவின் குடும்ப பங்ளா உள்ளது. அது, இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கட்டப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அந்த வளாகத்தை அரசாங்கம், தேசிய நினைவுச் சின்னமாக வகைப்படுத்தியது. பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தும் நோக்கில் அதைத் தன்வசம் கொண்டுவரும் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

ஆக்ஸ்லி ரோடு வளாகத்தின் கடைசி உரிமையாளர் திரு லீ குவான் யூவின் இளைய மகனான லீ சியன் யாங் ஆவார். அவர், மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் சகோதரர்.

ஆக்ஸ்லி ரோடு இல்லம் தொடர்பில் லீ சகோதரர்களுக்கிடையே பல காலமாகக் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. சொந்த அரசியல் லாபத்துக்காகத் தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மூத்த அமைச்சர் லீ அவ்வீட்டைப் பாதுகாக்க நினைத்தார் என்று லீ சியன் யாங்கும் சகோதரி லீ வெய் லிங்கும் குற்றஞ்சாட்டினர். மூத்த அமைச்சர் லீ, நாடாளுமன்றத்தில் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி, 38 ஆக்ஸ்லி ரோடு வளாகம் அரசாங்கத்தின்வசம் செல்வதற்காக ஒதுக்கப்பட்டது. அப்படியென்றால், அதைக் குடியிருப்பு, வணிக அல்லது மற்ற தனியார் பயன்பாட்டிற்காக மேம்படுத்த முடியாது என்று சிங்கப்பூர் நில அமைப்பும் தேசிய மரபுடைமைக் கழகமும் அப்போதும் அறிக்கைமூலம் தெரிவித்திருந்தன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆக்ஸ்லி சாலைலீ குவான் யூஅரசாங்கம்