$390,000 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்; மூவர் கைது

1 mins read
13a20f98-29ea-47fc-8b59-5c9661f85917
சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் இரண்டு மலேசியர்களும் ஒரு சிங்கப்பூரரும் சிக்கினர்.  - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சிங்கப்பூரில் மார்ச் 1ஆம் தேதி வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகள் நிறைந்த 3,600க்கும் அதிகமான அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிட்டத்தட்ட 390,000 வெள்ளிக்கு மேல் சிகரெட் தீர்வை, வரி ஏய்ப்பு செய்ததற்காக மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் அவர்கள் சிக்கினர். இதுகுறித்து வியாழக்கிழமை (மார்ச் 6) அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர்.

அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு வேன்களை நோக்கி இரண்டு ஆடவர்கள் சென்றனர். அப்போது அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வேனில் 1,800 பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தன. அதன் பின்னர் அந்த இரண்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் மலேசியர்கள். அவர்களின் வயது 36 மற்றும் 45 என்று அதிகாரிகள் கூறினர். சிகரெட்டுகள் இருந்த இரண்டு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்பின்னர் சேகார் ரோட்டில் 37 வயது சிங்கப்பூர் ஆடவர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சிகரெட்டுகள் விற்றதன் மூலம் கிடைத்ததாக நம்பப்படும் 19,000 வெள்ளி ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இரண்டு மலேசியர்களையும் சமூக ஊடகம் வழி தொடர்பு கொண்டு அந்தச் சிங்கப்பூரர் கள்ளச் சிகரெட்டுகளை விற்க உதவியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்