உலகின் ஆகப் பெரிய $3 பில்லியன் மோசடி வழக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று காவல்துறை கூறியுள்ளது.
தப்பியோடியவர்கள் மீது சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க சிங்கப்பூர் காவல்துறை, வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்து வருகிறது.
இம்மாதம் 7ஆம் தேதி சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த வாங் டேஹாய்க்கு கள்ளப்பணத்தை நல்லப் பணமாக மாற்றிய குற்றச்சாட்டில் 16 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படவுள்ள 10 வெளிநாட்டவர்களில் இவரும் ஒருவர்.
இதையடுத்து நாட்டைவிட்டுத் தப்பியோடிய 17 தனிப்பட்டவர்கள் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது. இவர்களில் சிங்கப்பூரர்களும் அடங்கியுள்ளனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு விளக்கமளித்த சிங்கப்பூர் காவல் படை, தங்களுடைய அமலாக்க அதிகாரம் சிங்கப்பூருக்கு உட்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினர்.
எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களில் நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“விசாரணை தொடர்ந்து நடைபெறும் $3 பில்லியன் மோசடி வழக்கில் சிங்கப்பூர் காவல்துறை உலகளாவிய கொள்கை கட்டமைப்புகளுடன் தகவல்களை பகிர்ந்துவருகிறது. தேடப்படும் நபர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவி நாடுவதும் இதில் அடங்கும். ஏற்கெனவே இருவருக்கு எதிராக இண்டர்போல் எச்சரிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளது,” என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
ஏற்கெனவே தேடப்படும் நபர்களில் இருவரின் அடையாளங்களை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இருவருக்கும் தொடர்புடைய $166.2 மில்லியனை ரொக்கமாகவோ, சொத்துகளாகவோ அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர் அல்லது முடக்கி வைத்துள்ளனர்.