சிங்கப்பூரில் பதிவான ஆகப் பெரிய பணமோசடி வழக்குடன் தொடர்புடைய முதல் சிங்கப்பூர் ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$3 பில்லியன் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்துடன் தொடர்புடைய கம்போடிய நாட்டவரான சூ பிங்ஹாயின் ஒட்டுநராக 41 வயது லியூ யிக் கிட் பணியாற்றினார்.
சூவை சிங்கப்பூர் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சூவுக்குச் சொந்தமான உடைமைகளைத் தாம் வைத்திருக்கவில்லை என்று காவல்துறையினரிடம் பொய்யுரைத்ததாக லியூ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சூவுக்குச் சொந்தமான நான்கு சொகுசு கார்கள் லியூ வசம் இருந்தன.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் லியூவுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தம்மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டை லியூ ஒப்புக்கொள்வாரா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை .
அந்த நான்கு சொகுசு கார்களையும் அவர் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் விட்டுச் சென்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
லியூ மீது இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுமத்தப்பட்டன.
லியூவின் செயலால் காவல்துறையினரால் அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்ய முடியாமல் போனதாகவும் அவர் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமது கட்சிக்காரர் பிணையில் விடுவிக்கப்பட்டு மலேசியாவின் பாகாங் மாநிலத்துக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பயணம் செய்ய லியூவின் வழக்கறிஞரான திரு கனகவிஜயன் நடராஜன் விண்ணப்பித்துள்ளார்.
தமது திருமணம் தொடர்பாக லியூ அங்கு செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்குச் செல்ல இருக்கும் லியூவுக்கு கூடுதல் பிணைத் தொகையாக $10,000 விதிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.