தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$3 பில்லியன் பணமோசடி வழக்கு: முதல்முறையாகச் சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

3 mins read
504e6225-7892-40e2-a67d-9749047bd2c0
தமது முன்னாள் முதலாளி அவரது உடைமைகளைத் தம்மிடம் விட்டுச் செல்லவில்லை என்று காவல்துறையினரிடம் பொய் கூறியதாகவும் தமது முன்னாள் முதலாளிக்குச் சொந்தமான நான்கு வாகனங்களை அப்புறப்படுத்தியதாகவும் 41 வயது லியூ யிக் கிட் மீது குற்றம் சுமத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓராண்டுக்கு முன்பு $3 பில்லியன் பண மோசடி தொடர்பாக சிங்கப்பூரில் பத்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பாக அவர்களுக்கு 13 மாதங்களிலிருந்து 17 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பண மோசடி வழக்கு தொடர்பாக முதல்முறையாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று 41 வயது லியூ யிக் கிட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவர் சிங்கப்பூரிலிருந்து தப்பி ஓடிய சீன நாட்டவரான சூ பிங்ஹாயின் வாகன ஓட்டுநர்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சூ, சிங்கப்பூர் அதிகாரிகளால் தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரது முன்னாள் ஓட்டுநர் லியூ மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தமது முன்னாள் முதலாளி அவரது உடைமைகளைத் தம்மிடம் விட்டுச் செல்லவில்லை என்று காவல்துறையினரிடம் பொய் கூறியதாகவும் தமது முன்னாள் முதலாளிக்குச் சொந்தமான நான்கு வாகனங்களை அப்புறப்படுத்தியதாகவும் லியூ மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சூவுக்குச் சொந்தமான ரால்ஸ் ராய்ஸ் ஃபேன்டம், ரால்ஸ் ராய்ஸ் கலினன் , ஃபெராரி எஃப்8 ஸ்பைடர், ஃபெராரி ஸ்ராடல் ஆகிய நான்கு சொகுசு கார்கள் லியூ வசம் இருந்தன.

அவற்றை அவர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புளோக் 20 அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டுச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக அந்த நான்கு வாகனங்களையும் அதிகாரிகளால் பறிமுதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, லியூ விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக லியூ சட்ட ஆலோசனை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கியான ஜூலியஸ் பேயர் வங்கியின் முன்னாள் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் போலி ஆவணத்தைப் பயன்படுத்தியபோது அதற்கு உடந்தையாக இருந்ததாக 35 வயது லியூ காய் மீது ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்ட ஒரே பெண்ணான லின் பாவ்யிங்கிற்கு லியூ 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உதவியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணமோசடி வழக்கு சம்பந்தமாக 26 வயது சீன நாட்டவர் மீது பத்துக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று காவல்துறை கூறியது. அந்த ஆடவரின் பெயர் வாங் சிமிங் என்று நம்பப்படுகிறது.

இவர் சிட்டிபேங்க் வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராகப் பணிபுரிந்தவர்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சூ பாவ்லின், வாங் சியூமிங் ஆகிய இருவரும் இவரது வாடிக்கையாளர்கள் என்று அறியப்படுகிறது.

அந்த 26 வயது முன்னாள் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர், வங்கியை ஏமாற்றும் நோக்குடன் போலிக் கடன் ஆவணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்