தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$3 பி. பணமோசடி வழக்கு: ‘ஜிசிபி’ மேல்மாடத்தில் இருந்து குதித்த ஆடவருக்குச் சிறை

1 mins read
f96a4c1f-dedc-47c2-9d64-ee7882800f27
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஆகப் பெரிய மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 10 வெளிநாட்டவர்களில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இரண்டாவது நபர் சூ ஹைஜின். - படம்: வீச்சேட், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கையின்போது ‘ஜிசிபி’ எனப்படும் ஆடம்பர பங்களா வீட்டின் மேல்மாடத்தில் இருந்து குதித்த சைப்ரசைச் சேர்ந்த சூ ஹைஜின் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்படுவதைத் தடுப்பது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது ஆகியவற்றின் தொடர்பில் அவர்மீது மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஏப்ரல் 4ஆம் தேதி, அவருக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஆகப் பெரிய மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 10 வெளிநாட்டவர்களில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள இரண்டாவது நபர் சூ ஹைஜின்.

கைதுசெய்யப்படுவதைத் தடுத்ததற்காக ஒரு குற்றச்சாட்டையும், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 11 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சூ, $165 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துகளைத் தானாகவே காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவரின் தற்காப்பு வழக்கறிஞர் ஜூலியன் டே நீதிமன்றத்தில் கூறினார்.

சீனாவைப் பூர்விகமாகக் கொண்ட சூ, பிற்பகல் 2.45 மணிவாக்கில் காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைதுசெய்யப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாடகைக்கு எடுத்திருந்த புக்கிட் தீமாவின் இவர்ட் பார்க்கில் உள்ள 32,000 சதுர அடி பரப்பளவிலான ஆடம்பர பங்களா வீடு ஒன்றில் சூ கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்