சிங்கப்பூரில் உள்ள பேருந்து ஓட்டுநர்களில் 10ல் நால்வர் பாதுகாப்புப் பயண புதுப்பிப்புப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒருவரான முஹம்மது ஃபாஹ்மி யாஹாயா, சாலையில் பேருந்தை ஓட்டும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
“பொறுமையை இழந்துவிட்டால், நீங்கள் வழிநடத்திச் செல்லும் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்காது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார் ஏழாண்டுகளாக ஓட்டுநர் பணியில் இருக்கும் திரு ஃபாஹ்மி, 47.
எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் பேருந்து சேவை எண் 70ன் ஓட்டுநராக அவர் தற்போது உள்ளார். அந்தப் பேருந்துச் சேவை இயோ சூ காங் பேருந்து நிலையத்தில் தொடங்கி ஷென்டன் வேயில் முடிவடைகிறது.
ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும்போது அதனைக் கண்டறிந்து சமாளிப்பது எவ்வாறு என்பதைப் பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்குக் கற்றுத்தரும் நோக்கம் கொண்டது அவர்களுக்கான புதுப்பிப்புப் பயிற்சி.
பாவனைப் பயிற்சி இயந்திரங்கள் மூலமும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தைப் பயிற்சி வகுப்புகள் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்குப் புதுப்பிப்புப் பயிற்சி வழங்கும் திட்டம் 2022 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அப்போது முதல் 4,000க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் அந்தப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
2024 டிசம்பர் வரை சிங்கப்பூரின் எல்லாப் பேருந்து ஓட்டுநர்களிலும் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் புதுப்பிப்புப் பயிற்சியை முடித்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.